என்னைப் பற்றி
- School of Energy Sciences, MKU
- பிறந்தது திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) வாழ்வது, ஜெத்தா, Saudi Arabia
Search This Blog
Powered by Blogger.
Followers
விருந்தினர்
Sunday, September 12, 2010
கடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி
(வண்ண மீன்களின் அணிவகுப்பின் இடையே நான்)
இதுவரை
யாரிடமும் அதுபற்றி சொல்லாமல் அறை திரும்பியதும் மருத்துவரிடம் சென்றோம். ஜலதோஷம் தீரும்வரை கண்டிப்பாக வெந்நீரில் தான் குளிக்க வேண்டும் டைவிங் கூடவே கூடாது என்று சொல்லிவிட்டார். மீறினால் மாத்திரைகளில் இருக்கும் வேதிபொருட்களால் (செடேட்டிவ் காம்பவுண்ட்ஸ்) டைவிங் சமயத்தில் பிரச்சனை வரும் எனவும் பயமுறுத்தினார்.
நண்பர்கள் என்னிடம் என்ன செய்ய போகிறாய் என்றனர். என்னையும் அறியாமல் வந்து விழுந்த வார்த்தைகள் "மாத்திரை சாப்பிட்டால் தானே? எனக்கு டைவிங் பயிற்சி தான் முக்கியம்". எனது உறுதியை பார்த்து அவர்களும் விட்டு விட்டனர். கொதிக்க வைத்த நீரை பாட்டிலில் வைத்து கொண்டு யாருக்கும் தெரியாமல் குடித்து கொண்டு சாமாளித்தேன். இரு நாட்களில் முழுமையான குணம் அடைந்தேன்.
பவளப் பாறைகளை அடையாளம் காணும் முறைகள் மற்றும் டைவிங் என அனைத்தையும் கற்று தேர்ந்தேன். தினமும் நட்சத்திர ஓட்டல் வாசம், பயிற்சி நடக்கும் இடத்திற்கு வாகன வசதியென ராஜவாழ்க்கை வாழ்ந்தோம். ஏசி எப்பொழுதும் நடுநடுங்க வைக்கும் குளிரில் தான் இருக்கும் அதை கம்பளியை போர்த்தி கொண்டு அனுபவித்தோம். மாரிமுத்துவுக்கு ஒடிசலான தேகம் என்பதால் அவரால் அந்த குளிரினை தாங்க முடியாமல் தடுமாறுவார். நாங்கள் அயர்ந்து தூங்கும் போது அவர் எழுந்து போய் நிறுத்துவதும், முத்துராமன் அதை மீண்டும் போடுவதுமாய் விடியும். பயிற்சி முடிந்ததும் ஊர் சுற்ற கிளம்பி விடுவோம்.
கனகு எனும் என் கல்லூரி ஜூனியர் (முத்துராமனின் கிளாஸ்மேட்) அந்தமானில் வேலை பார்த்து வந்தார். அவரும் எங்களோடு பயிற்சியில் இருந்தார். அவர்தான் எங்கள் டூரிஸ்ட் கைடு, சும்மா சொல்லக் கூடாது "இப்போ நீங்க பார்த்து கிட்டு இருக்கிறது தான் அந்தமானின்...." அப்படியென்று தொழில் நுணுக்கத்தோடு சுற்றிக் காட்டினார். எங்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் சற்றும் சளைக்காத பிறவி அது.
கிட்டத்தட்ட ஒரு மே மாதம் முழுதும் கழிந்த நிலையில், இறுதி நாளும் வந்தது. மிகச் சிறப்பான பிரிவுபச்சார விழா நடத்தி சான்றிதழ் தந்தனர். மேடையிலிருக்கும் விருந்தினருக்கு பொன்னாடை போர்த்த திடீரென நானும் அழைக்கப்பட்டேன். எனது டைவிங் இன்ஸ்ட்ரக்டருக்கு பொன்னாடை அணிவிக்கும் வாய்ப்பு பெற்றேன். எல்லாம் இனிதே நிறைவேறியது. டைவிங் பயிற்சியில் தேர்வு பெற்று சர்டிபிகேட் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சி வார்த்தையில் அடங்காதது. அதிலும் “இது மாதிரி ஒரு டீம் எனக்கு ஆஸ்திரேலியாவில் கிடைக்கவில்லையே” என டைவிங் இன்ஸ்ட்ரக்டர் சொன்ன போது மிகவும் பூரிப்பாக இருந்தது.
டைவிங் பயிற்சியின் இடைவெளியில் அருகில் இருக்கும் தமிழக சிற்றுண்டியகத்தில் சூடான மசால் வடை வாங்கி வந்து அனைவருக்கும் கொடுப்பேன். ஆஸ்திரேலியர்களுக்கு அது மிகவும் பிடித்துப் போய் விட்டது. "அதில் பச்சை மிளகாய் இருக்கும், கவனம்" என்று சொல்வதற்குள் அந்த பெண் அதை சாப்பிட்டு முகம் சிவக்க, காரத்தில் அலறியது மறக்க முடியாத நிகழ்வு. மேலும் ஒரு நாள், நான் ஜலதோஷத்தால் காலையில் உணவருந்தவில்லை.
அந்த நேரத்தில் பசி மயக்கத்தில் இருட்டிக் கொண்டு வர ஒரு வழியாக சமாளித்து கொண்டு இருக்குப் போது அந்த பெண்ணும், இன்ஸ்ட்ரக்டரும் என்னாச்சு என விசாரித்து தொலைதூரத்தில் உள்ள கடைக்கு எங்களுக்கு தெரியாமலேயே நடந்து சென்று எனக்காக பிரட்டும் ஜூஸும் வாங்கி வந்து கொடுத்த போது உள்ளம் நெகிழ்ந்தேன்.
இதைக் கவனித்த முனைவர் வெங்கடராமன் எனும் மதுரைகாரர் Zoological Survey of India-வில் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கிறார். அவர்தான் இந்த பயிற்சியின் இந்திய ஒருங்கிணைப்பாளர். மிகவும் நல்ல மனிதர். நாங்கள் டைவிங் படிப்பதற்காக வீட்டில் பணம் வாங்கி வந்ததை கேள்வி பட்டு கனிவோடு விசாரித்து உங்களுக்கு இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என முயற்சி செய்தவர். இன்றளவும் என்னோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். துளியளவும் பந்தா இல்லாத அற்புதமான மனிதர். அவர் என்னிடம் வந்து "இவர்கள் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள், இவர்கள் போய் பிரெட் வாங்கி வரவேண்டிய அவசியமே இல்லை. எவ்வளவு எளிமையாக இருக்கிறார்கள் பார்" என்றார்.
விழா சிறப்புற நிறைவேறியது. எங்களுக்கு கப்பல் இரண்டு நாட்கள் கழித்து தான். ஆனால் தங்கியிருந்த அறையை காலி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். எனவே அங்குள்ள ஒரு சாதாரண ஓட்டலுக்கு மாறினோம். இரண்டாம் நாள் புறப்படத் தயாரான போது மீண்டும் புயல் எச்சரிக்கை விடப்பட்டு கப்பல் புறப்பாடு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப் பட்டது. எனவே நாங்கள் தினமும் எல்லா இடங்களையும் சுற்றிபார்த்தும், பொருட்களை வாங்கி குவித்தும், ஜாலியாக இருந்தோம். கப்பல் டிக்கெட் ஏற்கனவே எடுத்து விட்டதால் ஓட்டல் அறைக்கு மட்டும் கணக்கு செய்து மீதி தொகைகளை செலவு செய்ய ஆரம்பித்தோம். கப்பல் புறப்பாடு பற்றி எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், “வன் சதன்” அலுவலகத்தை தொடர்பு கொண்டோம்.
அவர்களும் துறைமுகத்தை தொடர்பு கொண்டு எங்களிடம் புயல் காரணமாக இரு கப்பல்கள் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் இதனால் டிக்கெட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாகவும் ஒரு இடியை இறக்கினர். பொதுவாக அந்தமானே ஒரு சிறைசாலை போலத்தான். ஆகாய வழி மற்றும் கடல் வழி மார்க்கமாக மட்டுமே வெளியுலகிற்கு பயணிக்க முடியும் என்பதால், பேரிடர் நேரங்களில் அரசாங்க உயரதிகாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அதற்கு அடுத்தபடியாக அந்தமான்வாசிகளுக்கும் அதற்கப்புறம் இடம் இருந்தால் நம்மை போன்ற சுற்றுலாவாசிகள். அதிலும் பணம் படைத்தவர், முக்கிய புள்ளியென முந்திக் கொள்வர். அந்தமானின் விமானநிலையம் மிகச் சிறியது, அதற்கு மேல் அதை தரம் உயர்த்தும் அளவுக்கு தரை வலுவானது அல்ல. எனவே குட்டி விமான சேவை மட்டுமே உள்ளது.
அதனால், ஆகாயமார்க்கம் நமக்கு கண்டிப்பாக கிடைக்காது, கப்பல் பயணமாவது கைகூடுமா? வீட்டிற்கு நல்லமுறையில் திரும்புவோமா? என்ற கவலை அனைவரையும் சூழ்ந்தது. எங்கள் கப்பல் ரத்தானதால் எங்களுக்கு அடுத்த கப்பலில் முன்னுரிமை கிடைக்கும் என நம்பினோம். ஆனால் அதுவும் இல்லை என்று சொல்லி விட்டார்கள். எங்கள் நிலைமையை விட சுற்றுலா வந்த ஒரு நடுத்தர குடும்பத்தின் நிலைமை என் கண்களில் நீரை வரவழைத்தது. மாத சம்பளத்தில் சிறுக சிறுக சேமித்து அரசாங்க சுற்றுலா திட்டத்தில் பணம் பெற்று மனைவி, வயதுக்கு வந்த மகள் மற்றும் சிறு பையன் என குடும்ப சகிதம் வந்து, கப்பல் ரத்தானதால் நாங்கள் தங்கியிருந்த இளையோர் விடுதி வார்டனிடம் கெஞ்சி கூத்தாடி அறை எடுத்து தங்கியிருந்தார்கள்.
பொதுவாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மட்டும்தான் அங்கே மிகவும் மலிவு விலையில் அறைகள் கிடைக்கும். அவர் கையிருப்பு முற்றிலும் கரைந்து விட்டதால் அவரால் வேறெங்கும் செல்ல இயலவில்லை. உணவுக்கு கூட வழியின்றி பிறரிடம் கேட்கவும் தன்மானம் தடுக்க, தவித்து நின்ற அவர் நிலையறிந்து உணவு வாங்கி குடுத்து, கைசெலவுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்தோம். அவர் “தம்பி, இந்த அந்தமான் பயணத்தை வாழ்நாளில் சத்தியமாக என்னால் மறக்க முடியாது, உங்களையும் தான்” எனக் கண்கள் பனிக்க கூறினார்.
பிறகு, எங்களுக்கு அரசாங்க விருந்தினர் என்ற முன்னுரிமையில் கப்பலில் இடம் கிடைத்தது. அந்த குடும்பத்திடம் விடைபெற்று கனத்த இதயத்துடன் கப்பல் ஏறினோம். அப்போது அந்த மனிதர் சொன்ன வார்த்தைகள் ஏனோ என் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்து கொண்டே இருந்தன “தம்பி, இந்த ஊரில் அதிகபட்சம் ஒரு வாரம் இருக்கலாம் அதற்குமேல் இருந்தால் நரகம்தான்”
அந்தமானில் முதற்கட்ட டைவிங் பயிற்சி முடித்த பின்பு, சில மாதங்கள் கழித்து இரண்டாம் கட்ட பயிற்சியை நானும் நண்பர் மாரிமுத்துவும் கோவாவில் பயின்றோம். பின்பு நீச்சலும், டைவிங்கும் எங்களுக்கு தினசரி வாடிக்கையாகி விட்டது.
அந்தமான் பயணத்திற்கு பிறகு, கப்பல் பயணம் மேல் எனக்கு இருந்த வெறுப்பு, இந்திய அரசின் ஆராய்ச்சிக் கப்பல் ஒன்றில் ஒரு மாதம் பயணித்த போதும், பிறகு லட்சதீவுகளுக்கு ஒரு கருத்தரங்கிற்காக பயணிகள் கப்பலில் சென்ற போதும் ஏற்பட்ட நல்ல அனுபவங்களால் மெல்ல மெல்ல மாறிவிட்டது என்றே சொல்வேன்.
ஒவ்வொரு நாள் டைவிங்கும் ஒரு அற்புதம் தான். தினமும் அதே உற்சாகத்தோடு கடலடியில் இருந்த தமிழன், தற்பொழுது அமீரகத்தின் கடலடி வளங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.
தங்களின் மேலான ஆதரவுக்கும் விமர்சனங்களுக்கும் நன்றிகள் பல.
முற்றும்
அன்புடன்
(இடமிருந்து இரண்டாவது)
வில்சன்
Sunday, September 5, 2010
கடலடியில் ஒரு தமிழன் (பாகம்-6)
வன் சதன் - எங்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்ட வளாகம்
இதுவரை
அந்தமானின் அடுத்த முகத்தை பார்க்கும் முன் எங்கள் பயிற்சிப் பட்டறைப் பற்றி சொல்லியாக வேண்டும். முற்றிலும் குளிரூட்டப் பட்ட அந்த சிறிய அரங்கம் அந்தமானின் அதிமுக்கிய அரசு உயரதிகாரிகளின் வரவேற்புரையுடன் முதல் நாள் வகுப்பு துவக்க விழாவுடன் இனிதே துவங்கியது. எங்களுக்கு பயிற்சி அளிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து பவளப்பாறை வல்லுனர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் இந்திய வல்லுனர்களும் இணைந்து பயிற்சி அளிக்க ஆரம்பித்தனர்.
முதல் நாளன்று நண்பர்கள் அனைவரும் டிப்டாப்பாக ஆடை அணிந்து சென்றிருந்தோம். வந்திருந்த விஞ்ஞானிகள் அனைவரும் டிசர்ட்டும், பெர்முடாஸும் அணிந்து (இந்தியர் உட்பட) வந்திருந்தனர். எங்களுக்கு கிடைத்த முதல் அறிவுரையே "Be Casual" என்பது தான். எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. பயிற்சி பட்டறை என்றாலே யாராவது பிளேடு போட்டு எல்லாரையும் தூங்க வைத்து கொண்டு இருப்பார். காம்பிளிமெண்டாக கிடைக்கும் லெதர் பேக்கிற்காகவும், சர்டிபிகேட்டிற்காகவும் அதை சகித்து கொண்டு இருப்போம்.
ஆனால் இதுவரை நான் இப்படி ஒரு கலகலப்பான மற்றும் வினோதமான பயிற்சி வகுப்பை பார்த்ததே இல்லை. முதல் மூன்று நாட்கள் முழுதும் பவளப்பாறைகளின் முக்கியத்துவம் பற்றியும் அவற்றை எப்படி பாதுகாப்பது என்பது குறித்தும் வகுப்புகள் நடந்தன.
ஆஸ்திரேலியாவில் பட்டமேற்படிப்பு படித்து கொண்டு இருக்கும் ஒரு இளம் மாணவி கீச்சுகுரலில் எங்களுக்கு வகுப்பு எடுக்கும் போது வாய் பிளந்து ரசித்தோம். (ஹ்ம்ம்ம்.. வெள்ளைக்காரி... வெள்ளைக்காரிதான் என்னா கலராயிருக்கா....!!!) அவள் தவிர மற்றொரு சீனப் பொம்பளையும்? வந்திருந்தாள். டியூப்லைட்டின் முன் குண்டு பல்பாய் அவள் வெளிச்சம் எடுபடவேயில்லை. டியூப்லைட்டா? என நீங்கள் முறைப்பது தெரிகிறது. அதற்கு காரணம் இருக்கிறது.
பயிற்சியின் இடையே எங்களுக்கு டைவிங் பயிற்சி இலவசமாக அளிக்கப் போவதாக இன்ப அதிர்ச்சி அளித்தனர். இதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு குழு வருகிறது எனவும் அறிந்தோம். இவர்கள் ஆஸ்திரேலியாவின் பிரபல டைவிங் பயிற்றுனர்கள் என்றும் ஆஸ்திரேலிய கடற்படைக்கு டைவிங் பயிற்சி அளிப்பவர்கள் எனவும் எங்களுக்காக பிரத்யேகமாக வருகிறார்கள் எனவும் அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன், சும்மாவா? அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி அந்தமானில் டைவிங் படிக்க பணம் வாங்கி வந்த எனக்கு இலவசமாக அதுவும் ஆஸ்திரேலியா நிபுணர்கள் அளித்தால் எப்படி இருக்கும்?
ஐஸ் பிரியாணிக்கு ஏங்கியவனுக்கு மட்டன் பிரியாணி கிடைத்தது போல இருந்தது. நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டைவிங் பயிற்சியாளர்கள் நான்காம் நாள் வருவார்கள் என அறிவிக்கப் பட்டது. நாங்கள் அனைவரும் இருப்புக் கொள்ளாமல் அன்று காலையில் அமர்ந்து இருந்தோம். மதியவேளையில் அந்த டீம் வந்து சேர்ந்தது. அதன் தலைவருக்கு (இன்ஸ்ட்ரக்டர்) ஒரு முப்பத்தைந்து வயது இருக்கும். உதவி இன்ஸ்ட்ரக்டர் ஒரு பத்தொன்பது வயது அழகிய இளம்பெண். அவள் வந்ததும் சோடியம் விளக்காய் ஜொலிக்க ஆரம்பித்தாள். இப்போ புரியுதா? ட்யூப்லைட்டின் அர்த்தம்? சரி, சரி மேட்டருக்கு வருகிறேன்.
டைவிங் படிக்கப் படிப்பு தேவையில்லை ஆங்கில அறிவு மட்டும் கொஞ்சம் இருந்தால் போதும். மற்றபடி உடல் தகுதியும் நீச்சல் திறமையும் முக்கியம். எனவே, முதலில் நீச்சல் தேர்வு இருக்கும் அதில் தேர்வு பெற்றவர்களுக்கு மட்டும் தான் பயிற்சி என கண்டிப்பாக சொல்லிவிட்டனர். ஓரளவு நம்பிக்கை இருந்தாலும், மனதிற்குள் ஒரு கிலி இருக்கத்தான் செய்தது. மறுநாள் அனைவரையும் கடலுக்கு கூட்டி சென்றனர். 3 கி.மீ. உள்ளே சென்றதும் படகை நிறுத்தி விட்டு இங்கிருந்து கரைக்கு எந்தவித உபகரணம் இல்லாமல் நீந்தி செல்லுங்கள் என்றனர். பல்கலைகழகத்தில் சேர்ந்த பின்பு முகக்கவச கண்ணாடி மற்றும் காலுக்கு துடுப்பு அணிந்து சென்றே பழகிப் போன எனக்கும் நண்பர் மாரிமுத்துவுக்கும் எதுவும் இல்லாமல் நீந்த வேண்டும் என்றதும் கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது.
எங்களுடன் களத்தில் இறங்கிய நிறைய வீரர்கள் பாதியிலேயே தோற்று படகில் ஏறினர். நானும், நண்பரும் தொட்டு விடும் தூரத்தில் கரை இருக்கும் நம்பிக்கையில் நீந்தினோம். அதுவோ தொடுவானம் போல் போய் கொண்டே இருந்தது. இருப்பினும் ஒரு வைராக்கியத்துடன் நீந்தி கரை சேர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டோம். தம்பி முத்துராமன் ஏற்கனவே டைவிங் அந்தமானில் படித்து இருந்ததால் அவர் படகில் இருந்து எங்களுக்கு அளித்த ஊக்கம் மறக்க முடியாதது.
தேர்ச்சிப் பெற்ற அனைவரையும் இரண்டு குழுவாக பிரித்து டைவிங் டிரைனிங் கொடுக்க ஆரம்பித்தனர். முதல் நாள் கடலுக்கடியில் எப்படி பாதுகாப்பாக செல்வது என்பது பற்றியும், ஆழத்திற்கு ஏற்ப மாறும் அழுத்த மாறுபாடுகள் குறித்தும் வகுப்பு நடந்தது. மறுநாள் காலை ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலின் நீச்சல் குளத்தில் கடல் நீர் நிரப்பி அதில் பயிற்சி அளித்தனர்.
அடுத்த நாள் காலை, முதன்முதலாக கடலில் டைவிங் என்றதும் ஆர்வமும் பதட்டமும் என்னை ஆட்கொண்டது. இதனிடையில் கப்பலில் வரும்போதே எனக்கு கடுமையான ஜலதோஷம் பிடித்து அவதிப்பட்டேன். அந்தமான் வந்தும் சரியாகவில்லை. டைவிங் பயிற்சியின் போது மூக்கடைப்பு இருந்தால் மிகவும் ஆபத்து என அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் கொடுத்த விண்ணப்பத்திலும் எனக்கு மூக்கடைப்பு மற்றும் சளியில்லை என உறுதியளித்து விட்டேன். எப்படியாவது டைவிங் கற்றுக் கொள்ள வேண்டும் ஆர்வமே மேலோங்கி இருந்தது.
முதல்நாள் டைவிங் எனது பிறந்தநாள் அன்று, அது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கடலின் தரைக்கு சென்று அனைவரும் முழங்கால் இட்டு அமர்ந்து மீன்கள் கூட்டத்தை ரசித்தோம். முதலில் எங்களைக் கண்டு மிரண்டவைகள் சிறிது நேரம் கழித்து எங்களை கூட்டமாக சூழ்ந்து கொண்டன. எனக்கு என்னவோ அவை எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வது போலவே தோன்றியது. இதுவரை டிஸ்கவரி சேனலில் மட்டுமே பார்த்து ரசித்த வண்ண மீன்களின் அணிவகுப்பை நேரிடையாக அதுவும் பிறந்தநாள் அன்று கண்டு ரசித்தது எனது பாக்கியம் என்று தான் சொல்வேன்.
அவ்வப்போது மூக்கடைப்பினால் சிரமப்பட்டாலும் சமாளித்து கொண்டேன். டைவிங் முடிந்து கடற்பரப்பு வந்ததும் மூக்கை சிந்திய போது இரத்தம் வந்ததும் நண்பர்கள் மிகவும் பயந்து போனார்கள்.
அடுத்த பதிவில் நிறைவுறும் . . .
Subscribe to:
Posts (Atom)