என்னைப் பற்றி
- School of Energy Sciences, MKU
- பிறந்தது திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) வாழ்வது, ஜெத்தா, Saudi Arabia
Search This Blog
Blog Archive
Powered by Blogger.
Followers
விருந்தினர்
Sunday, September 12, 2010
கடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி
(வண்ண மீன்களின் அணிவகுப்பின் இடையே நான்)
இதுவரை
யாரிடமும் அதுபற்றி சொல்லாமல் அறை திரும்பியதும் மருத்துவரிடம் சென்றோம். ஜலதோஷம் தீரும்வரை கண்டிப்பாக வெந்நீரில் தான் குளிக்க வேண்டும் டைவிங் கூடவே கூடாது என்று சொல்லிவிட்டார். மீறினால் மாத்திரைகளில் இருக்கும் வேதிபொருட்களால் (செடேட்டிவ் காம்பவுண்ட்ஸ்) டைவிங் சமயத்தில் பிரச்சனை வரும் எனவும் பயமுறுத்தினார்.
நண்பர்கள் என்னிடம் என்ன செய்ய போகிறாய் என்றனர். என்னையும் அறியாமல் வந்து விழுந்த வார்த்தைகள் "மாத்திரை சாப்பிட்டால் தானே? எனக்கு டைவிங் பயிற்சி தான் முக்கியம்". எனது உறுதியை பார்த்து அவர்களும் விட்டு விட்டனர். கொதிக்க வைத்த நீரை பாட்டிலில் வைத்து கொண்டு யாருக்கும் தெரியாமல் குடித்து கொண்டு சாமாளித்தேன். இரு நாட்களில் முழுமையான குணம் அடைந்தேன்.
பவளப் பாறைகளை அடையாளம் காணும் முறைகள் மற்றும் டைவிங் என அனைத்தையும் கற்று தேர்ந்தேன். தினமும் நட்சத்திர ஓட்டல் வாசம், பயிற்சி நடக்கும் இடத்திற்கு வாகன வசதியென ராஜவாழ்க்கை வாழ்ந்தோம். ஏசி எப்பொழுதும் நடுநடுங்க வைக்கும் குளிரில் தான் இருக்கும் அதை கம்பளியை போர்த்தி கொண்டு அனுபவித்தோம். மாரிமுத்துவுக்கு ஒடிசலான தேகம் என்பதால் அவரால் அந்த குளிரினை தாங்க முடியாமல் தடுமாறுவார். நாங்கள் அயர்ந்து தூங்கும் போது அவர் எழுந்து போய் நிறுத்துவதும், முத்துராமன் அதை மீண்டும் போடுவதுமாய் விடியும். பயிற்சி முடிந்ததும் ஊர் சுற்ற கிளம்பி விடுவோம்.
கனகு எனும் என் கல்லூரி ஜூனியர் (முத்துராமனின் கிளாஸ்மேட்) அந்தமானில் வேலை பார்த்து வந்தார். அவரும் எங்களோடு பயிற்சியில் இருந்தார். அவர்தான் எங்கள் டூரிஸ்ட் கைடு, சும்மா சொல்லக் கூடாது "இப்போ நீங்க பார்த்து கிட்டு இருக்கிறது தான் அந்தமானின்...." அப்படியென்று தொழில் நுணுக்கத்தோடு சுற்றிக் காட்டினார். எங்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் சற்றும் சளைக்காத பிறவி அது.
கிட்டத்தட்ட ஒரு மே மாதம் முழுதும் கழிந்த நிலையில், இறுதி நாளும் வந்தது. மிகச் சிறப்பான பிரிவுபச்சார விழா நடத்தி சான்றிதழ் தந்தனர். மேடையிலிருக்கும் விருந்தினருக்கு பொன்னாடை போர்த்த திடீரென நானும் அழைக்கப்பட்டேன். எனது டைவிங் இன்ஸ்ட்ரக்டருக்கு பொன்னாடை அணிவிக்கும் வாய்ப்பு பெற்றேன். எல்லாம் இனிதே நிறைவேறியது. டைவிங் பயிற்சியில் தேர்வு பெற்று சர்டிபிகேட் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சி வார்த்தையில் அடங்காதது. அதிலும் “இது மாதிரி ஒரு டீம் எனக்கு ஆஸ்திரேலியாவில் கிடைக்கவில்லையே” என டைவிங் இன்ஸ்ட்ரக்டர் சொன்ன போது மிகவும் பூரிப்பாக இருந்தது.
டைவிங் பயிற்சியின் இடைவெளியில் அருகில் இருக்கும் தமிழக சிற்றுண்டியகத்தில் சூடான மசால் வடை வாங்கி வந்து அனைவருக்கும் கொடுப்பேன். ஆஸ்திரேலியர்களுக்கு அது மிகவும் பிடித்துப் போய் விட்டது. "அதில் பச்சை மிளகாய் இருக்கும், கவனம்" என்று சொல்வதற்குள் அந்த பெண் அதை சாப்பிட்டு முகம் சிவக்க, காரத்தில் அலறியது மறக்க முடியாத நிகழ்வு. மேலும் ஒரு நாள், நான் ஜலதோஷத்தால் காலையில் உணவருந்தவில்லை.
அந்த நேரத்தில் பசி மயக்கத்தில் இருட்டிக் கொண்டு வர ஒரு வழியாக சமாளித்து கொண்டு இருக்குப் போது அந்த பெண்ணும், இன்ஸ்ட்ரக்டரும் என்னாச்சு என விசாரித்து தொலைதூரத்தில் உள்ள கடைக்கு எங்களுக்கு தெரியாமலேயே நடந்து சென்று எனக்காக பிரட்டும் ஜூஸும் வாங்கி வந்து கொடுத்த போது உள்ளம் நெகிழ்ந்தேன்.
இதைக் கவனித்த முனைவர் வெங்கடராமன் எனும் மதுரைகாரர் Zoological Survey of India-வில் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கிறார். அவர்தான் இந்த பயிற்சியின் இந்திய ஒருங்கிணைப்பாளர். மிகவும் நல்ல மனிதர். நாங்கள் டைவிங் படிப்பதற்காக வீட்டில் பணம் வாங்கி வந்ததை கேள்வி பட்டு கனிவோடு விசாரித்து உங்களுக்கு இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என முயற்சி செய்தவர். இன்றளவும் என்னோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். துளியளவும் பந்தா இல்லாத அற்புதமான மனிதர். அவர் என்னிடம் வந்து "இவர்கள் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள், இவர்கள் போய் பிரெட் வாங்கி வரவேண்டிய அவசியமே இல்லை. எவ்வளவு எளிமையாக இருக்கிறார்கள் பார்" என்றார்.
விழா சிறப்புற நிறைவேறியது. எங்களுக்கு கப்பல் இரண்டு நாட்கள் கழித்து தான். ஆனால் தங்கியிருந்த அறையை காலி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். எனவே அங்குள்ள ஒரு சாதாரண ஓட்டலுக்கு மாறினோம். இரண்டாம் நாள் புறப்படத் தயாரான போது மீண்டும் புயல் எச்சரிக்கை விடப்பட்டு கப்பல் புறப்பாடு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப் பட்டது. எனவே நாங்கள் தினமும் எல்லா இடங்களையும் சுற்றிபார்த்தும், பொருட்களை வாங்கி குவித்தும், ஜாலியாக இருந்தோம். கப்பல் டிக்கெட் ஏற்கனவே எடுத்து விட்டதால் ஓட்டல் அறைக்கு மட்டும் கணக்கு செய்து மீதி தொகைகளை செலவு செய்ய ஆரம்பித்தோம். கப்பல் புறப்பாடு பற்றி எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், “வன் சதன்” அலுவலகத்தை தொடர்பு கொண்டோம்.
அவர்களும் துறைமுகத்தை தொடர்பு கொண்டு எங்களிடம் புயல் காரணமாக இரு கப்பல்கள் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் இதனால் டிக்கெட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாகவும் ஒரு இடியை இறக்கினர். பொதுவாக அந்தமானே ஒரு சிறைசாலை போலத்தான். ஆகாய வழி மற்றும் கடல் வழி மார்க்கமாக மட்டுமே வெளியுலகிற்கு பயணிக்க முடியும் என்பதால், பேரிடர் நேரங்களில் அரசாங்க உயரதிகாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அதற்கு அடுத்தபடியாக அந்தமான்வாசிகளுக்கும் அதற்கப்புறம் இடம் இருந்தால் நம்மை போன்ற சுற்றுலாவாசிகள். அதிலும் பணம் படைத்தவர், முக்கிய புள்ளியென முந்திக் கொள்வர். அந்தமானின் விமானநிலையம் மிகச் சிறியது, அதற்கு மேல் அதை தரம் உயர்த்தும் அளவுக்கு தரை வலுவானது அல்ல. எனவே குட்டி விமான சேவை மட்டுமே உள்ளது.
அதனால், ஆகாயமார்க்கம் நமக்கு கண்டிப்பாக கிடைக்காது, கப்பல் பயணமாவது கைகூடுமா? வீட்டிற்கு நல்லமுறையில் திரும்புவோமா? என்ற கவலை அனைவரையும் சூழ்ந்தது. எங்கள் கப்பல் ரத்தானதால் எங்களுக்கு அடுத்த கப்பலில் முன்னுரிமை கிடைக்கும் என நம்பினோம். ஆனால் அதுவும் இல்லை என்று சொல்லி விட்டார்கள். எங்கள் நிலைமையை விட சுற்றுலா வந்த ஒரு நடுத்தர குடும்பத்தின் நிலைமை என் கண்களில் நீரை வரவழைத்தது. மாத சம்பளத்தில் சிறுக சிறுக சேமித்து அரசாங்க சுற்றுலா திட்டத்தில் பணம் பெற்று மனைவி, வயதுக்கு வந்த மகள் மற்றும் சிறு பையன் என குடும்ப சகிதம் வந்து, கப்பல் ரத்தானதால் நாங்கள் தங்கியிருந்த இளையோர் விடுதி வார்டனிடம் கெஞ்சி கூத்தாடி அறை எடுத்து தங்கியிருந்தார்கள்.
பொதுவாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மட்டும்தான் அங்கே மிகவும் மலிவு விலையில் அறைகள் கிடைக்கும். அவர் கையிருப்பு முற்றிலும் கரைந்து விட்டதால் அவரால் வேறெங்கும் செல்ல இயலவில்லை. உணவுக்கு கூட வழியின்றி பிறரிடம் கேட்கவும் தன்மானம் தடுக்க, தவித்து நின்ற அவர் நிலையறிந்து உணவு வாங்கி குடுத்து, கைசெலவுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்தோம். அவர் “தம்பி, இந்த அந்தமான் பயணத்தை வாழ்நாளில் சத்தியமாக என்னால் மறக்க முடியாது, உங்களையும் தான்” எனக் கண்கள் பனிக்க கூறினார்.
பிறகு, எங்களுக்கு அரசாங்க விருந்தினர் என்ற முன்னுரிமையில் கப்பலில் இடம் கிடைத்தது. அந்த குடும்பத்திடம் விடைபெற்று கனத்த இதயத்துடன் கப்பல் ஏறினோம். அப்போது அந்த மனிதர் சொன்ன வார்த்தைகள் ஏனோ என் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்து கொண்டே இருந்தன “தம்பி, இந்த ஊரில் அதிகபட்சம் ஒரு வாரம் இருக்கலாம் அதற்குமேல் இருந்தால் நரகம்தான்”
அந்தமானில் முதற்கட்ட டைவிங் பயிற்சி முடித்த பின்பு, சில மாதங்கள் கழித்து இரண்டாம் கட்ட பயிற்சியை நானும் நண்பர் மாரிமுத்துவும் கோவாவில் பயின்றோம். பின்பு நீச்சலும், டைவிங்கும் எங்களுக்கு தினசரி வாடிக்கையாகி விட்டது.
அந்தமான் பயணத்திற்கு பிறகு, கப்பல் பயணம் மேல் எனக்கு இருந்த வெறுப்பு, இந்திய அரசின் ஆராய்ச்சிக் கப்பல் ஒன்றில் ஒரு மாதம் பயணித்த போதும், பிறகு லட்சதீவுகளுக்கு ஒரு கருத்தரங்கிற்காக பயணிகள் கப்பலில் சென்ற போதும் ஏற்பட்ட நல்ல அனுபவங்களால் மெல்ல மெல்ல மாறிவிட்டது என்றே சொல்வேன்.
ஒவ்வொரு நாள் டைவிங்கும் ஒரு அற்புதம் தான். தினமும் அதே உற்சாகத்தோடு கடலடியில் இருந்த தமிழன், தற்பொழுது அமீரகத்தின் கடலடி வளங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.
தங்களின் மேலான ஆதரவுக்கும் விமர்சனங்களுக்கும் நன்றிகள் பல.
முற்றும்
அன்புடன்
(இடமிருந்து இரண்டாவது)
வில்சன்
Sunday, September 5, 2010
கடலடியில் ஒரு தமிழன் (பாகம்-6)
வன் சதன் - எங்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்ட வளாகம்
இதுவரை
அந்தமானின் அடுத்த முகத்தை பார்க்கும் முன் எங்கள் பயிற்சிப் பட்டறைப் பற்றி சொல்லியாக வேண்டும். முற்றிலும் குளிரூட்டப் பட்ட அந்த சிறிய அரங்கம் அந்தமானின் அதிமுக்கிய அரசு உயரதிகாரிகளின் வரவேற்புரையுடன் முதல் நாள் வகுப்பு துவக்க விழாவுடன் இனிதே துவங்கியது. எங்களுக்கு பயிற்சி அளிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து பவளப்பாறை வல்லுனர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் இந்திய வல்லுனர்களும் இணைந்து பயிற்சி அளிக்க ஆரம்பித்தனர்.
முதல் நாளன்று நண்பர்கள் அனைவரும் டிப்டாப்பாக ஆடை அணிந்து சென்றிருந்தோம். வந்திருந்த விஞ்ஞானிகள் அனைவரும் டிசர்ட்டும், பெர்முடாஸும் அணிந்து (இந்தியர் உட்பட) வந்திருந்தனர். எங்களுக்கு கிடைத்த முதல் அறிவுரையே "Be Casual" என்பது தான். எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. பயிற்சி பட்டறை என்றாலே யாராவது பிளேடு போட்டு எல்லாரையும் தூங்க வைத்து கொண்டு இருப்பார். காம்பிளிமெண்டாக கிடைக்கும் லெதர் பேக்கிற்காகவும், சர்டிபிகேட்டிற்காகவும் அதை சகித்து கொண்டு இருப்போம்.
ஆனால் இதுவரை நான் இப்படி ஒரு கலகலப்பான மற்றும் வினோதமான பயிற்சி வகுப்பை பார்த்ததே இல்லை. முதல் மூன்று நாட்கள் முழுதும் பவளப்பாறைகளின் முக்கியத்துவம் பற்றியும் அவற்றை எப்படி பாதுகாப்பது என்பது குறித்தும் வகுப்புகள் நடந்தன.
ஆஸ்திரேலியாவில் பட்டமேற்படிப்பு படித்து கொண்டு இருக்கும் ஒரு இளம் மாணவி கீச்சுகுரலில் எங்களுக்கு வகுப்பு எடுக்கும் போது வாய் பிளந்து ரசித்தோம். (ஹ்ம்ம்ம்.. வெள்ளைக்காரி... வெள்ளைக்காரிதான் என்னா கலராயிருக்கா....!!!) அவள் தவிர மற்றொரு சீனப் பொம்பளையும்? வந்திருந்தாள். டியூப்லைட்டின் முன் குண்டு பல்பாய் அவள் வெளிச்சம் எடுபடவேயில்லை. டியூப்லைட்டா? என நீங்கள் முறைப்பது தெரிகிறது. அதற்கு காரணம் இருக்கிறது.
பயிற்சியின் இடையே எங்களுக்கு டைவிங் பயிற்சி இலவசமாக அளிக்கப் போவதாக இன்ப அதிர்ச்சி அளித்தனர். இதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு குழு வருகிறது எனவும் அறிந்தோம். இவர்கள் ஆஸ்திரேலியாவின் பிரபல டைவிங் பயிற்றுனர்கள் என்றும் ஆஸ்திரேலிய கடற்படைக்கு டைவிங் பயிற்சி அளிப்பவர்கள் எனவும் எங்களுக்காக பிரத்யேகமாக வருகிறார்கள் எனவும் அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன், சும்மாவா? அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி அந்தமானில் டைவிங் படிக்க பணம் வாங்கி வந்த எனக்கு இலவசமாக அதுவும் ஆஸ்திரேலியா நிபுணர்கள் அளித்தால் எப்படி இருக்கும்?
ஐஸ் பிரியாணிக்கு ஏங்கியவனுக்கு மட்டன் பிரியாணி கிடைத்தது போல இருந்தது. நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டைவிங் பயிற்சியாளர்கள் நான்காம் நாள் வருவார்கள் என அறிவிக்கப் பட்டது. நாங்கள் அனைவரும் இருப்புக் கொள்ளாமல் அன்று காலையில் அமர்ந்து இருந்தோம். மதியவேளையில் அந்த டீம் வந்து சேர்ந்தது. அதன் தலைவருக்கு (இன்ஸ்ட்ரக்டர்) ஒரு முப்பத்தைந்து வயது இருக்கும். உதவி இன்ஸ்ட்ரக்டர் ஒரு பத்தொன்பது வயது அழகிய இளம்பெண். அவள் வந்ததும் சோடியம் விளக்காய் ஜொலிக்க ஆரம்பித்தாள். இப்போ புரியுதா? ட்யூப்லைட்டின் அர்த்தம்? சரி, சரி மேட்டருக்கு வருகிறேன்.
டைவிங் படிக்கப் படிப்பு தேவையில்லை ஆங்கில அறிவு மட்டும் கொஞ்சம் இருந்தால் போதும். மற்றபடி உடல் தகுதியும் நீச்சல் திறமையும் முக்கியம். எனவே, முதலில் நீச்சல் தேர்வு இருக்கும் அதில் தேர்வு பெற்றவர்களுக்கு மட்டும் தான் பயிற்சி என கண்டிப்பாக சொல்லிவிட்டனர். ஓரளவு நம்பிக்கை இருந்தாலும், மனதிற்குள் ஒரு கிலி இருக்கத்தான் செய்தது. மறுநாள் அனைவரையும் கடலுக்கு கூட்டி சென்றனர். 3 கி.மீ. உள்ளே சென்றதும் படகை நிறுத்தி விட்டு இங்கிருந்து கரைக்கு எந்தவித உபகரணம் இல்லாமல் நீந்தி செல்லுங்கள் என்றனர். பல்கலைகழகத்தில் சேர்ந்த பின்பு முகக்கவச கண்ணாடி மற்றும் காலுக்கு துடுப்பு அணிந்து சென்றே பழகிப் போன எனக்கும் நண்பர் மாரிமுத்துவுக்கும் எதுவும் இல்லாமல் நீந்த வேண்டும் என்றதும் கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது.
எங்களுடன் களத்தில் இறங்கிய நிறைய வீரர்கள் பாதியிலேயே தோற்று படகில் ஏறினர். நானும், நண்பரும் தொட்டு விடும் தூரத்தில் கரை இருக்கும் நம்பிக்கையில் நீந்தினோம். அதுவோ தொடுவானம் போல் போய் கொண்டே இருந்தது. இருப்பினும் ஒரு வைராக்கியத்துடன் நீந்தி கரை சேர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டோம். தம்பி முத்துராமன் ஏற்கனவே டைவிங் அந்தமானில் படித்து இருந்ததால் அவர் படகில் இருந்து எங்களுக்கு அளித்த ஊக்கம் மறக்க முடியாதது.
தேர்ச்சிப் பெற்ற அனைவரையும் இரண்டு குழுவாக பிரித்து டைவிங் டிரைனிங் கொடுக்க ஆரம்பித்தனர். முதல் நாள் கடலுக்கடியில் எப்படி பாதுகாப்பாக செல்வது என்பது பற்றியும், ஆழத்திற்கு ஏற்ப மாறும் அழுத்த மாறுபாடுகள் குறித்தும் வகுப்பு நடந்தது. மறுநாள் காலை ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலின் நீச்சல் குளத்தில் கடல் நீர் நிரப்பி அதில் பயிற்சி அளித்தனர்.
அடுத்த நாள் காலை, முதன்முதலாக கடலில் டைவிங் என்றதும் ஆர்வமும் பதட்டமும் என்னை ஆட்கொண்டது. இதனிடையில் கப்பலில் வரும்போதே எனக்கு கடுமையான ஜலதோஷம் பிடித்து அவதிப்பட்டேன். அந்தமான் வந்தும் சரியாகவில்லை. டைவிங் பயிற்சியின் போது மூக்கடைப்பு இருந்தால் மிகவும் ஆபத்து என அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் கொடுத்த விண்ணப்பத்திலும் எனக்கு மூக்கடைப்பு மற்றும் சளியில்லை என உறுதியளித்து விட்டேன். எப்படியாவது டைவிங் கற்றுக் கொள்ள வேண்டும் ஆர்வமே மேலோங்கி இருந்தது.
முதல்நாள் டைவிங் எனது பிறந்தநாள் அன்று, அது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கடலின் தரைக்கு சென்று அனைவரும் முழங்கால் இட்டு அமர்ந்து மீன்கள் கூட்டத்தை ரசித்தோம். முதலில் எங்களைக் கண்டு மிரண்டவைகள் சிறிது நேரம் கழித்து எங்களை கூட்டமாக சூழ்ந்து கொண்டன. எனக்கு என்னவோ அவை எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வது போலவே தோன்றியது. இதுவரை டிஸ்கவரி சேனலில் மட்டுமே பார்த்து ரசித்த வண்ண மீன்களின் அணிவகுப்பை நேரிடையாக அதுவும் பிறந்தநாள் அன்று கண்டு ரசித்தது எனது பாக்கியம் என்று தான் சொல்வேன்.
அவ்வப்போது மூக்கடைப்பினால் சிரமப்பட்டாலும் சமாளித்து கொண்டேன். டைவிங் முடிந்து கடற்பரப்பு வந்ததும் மூக்கை சிந்திய போது இரத்தம் வந்ததும் நண்பர்கள் மிகவும் பயந்து போனார்கள்.
அடுத்த பதிவில் நிறைவுறும் . . .
Monday, August 9, 2010
கடலடியில் ஒரு தமிழன் (பாகம்-5)
(சிதிலமடைந்த ராஸ் தீவின் ஒரு குடியிருப்பு)
இதுவரை
பாகம்-4 எங்கள் உடைமைகளை எல்லாம் காப்பறையில் வைத்து பூட்டி விட்டு அவரவர் இருக்கைக்கு சென்றோம் அது இரயில் வண்டியில் இருப்பது போல மூன்றடுக்கு படுக்கை, ஒரு பெரிய ஹாலில் சுமார் 150 பேர் தங்கும் அளவுக்கு நெருக்கமாக அமைக்கப் பட்டு இருந்தது. கப்பலில் மூன்றாம் வகுப்பு பயணிகளின் அவலங்கள் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். விரிவான விளக்கத்திற்கு இந்த வலைத்தளத்தை காணவும் (http://www.travelblog.org/Asia/India/Andaman-and-Nicobar-Islands/Port-Blair/blog-481773.html).
இருப்பினும் நாங்கள் எங்கள் கப்பல் பயணத்தை மிகவும் ரசித்து அனுபவித்தோம். கரை மறைந்து ஆழக்கடலில் செல்லும் போது நீலக்கடலின் அமைதியும் எப்போதாவது தொலைவில் கடந்து செல்லும் மற்ற கப்பல்களை காணும் போது ஏற்படும் மகிழ்ச்சியும் விவரிக்க இயலாதவை. எங்களுடன் இதே பயிற்சிக்காக பிற பல்கலையிலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தனர்.
மொத்தம் பத்து பேர் இவ்வாறு கப்பலில் இருந்தோம்.கப்பல் பயணத்தின் போது ஒவ்வாமையால் அவ்வப்போது ஏற்படும் வாந்தியும், ஒருவருக்கொருவர் அறியாமல் சென்று வாந்தி எடுத்து விட்டு அடுத்தவரின் ஒவ்வாமையை கிண்டல் செய்வதுமாய் மகிழ்ச்சியாக நாட்கள் கழிந்தன. இரண்டு இரவுகள் கப்பலில் கழிந்து மூன்றாம் நாளில் அந்தமானை நெருங்கினோம்.
அந்தமானின் தலைநகரான நிக்கோபர் சென்று அடையும் முன் கார்நிக்கோபர் தீவுக்கு சென்று அதன் பயணிகளை இறக்க வேண்டும். அந்த இடத்தில் பவளப்பாறைகள் அதிகம் என்பதால் 10° சானல் எனும் ஒரு குறுகிய கால்வாய் வழியே பயணிக்க வேண்டும். கைதேர்ந்த மாலுமிக்கே அது சவாலான விஷயமாம் அதுவும் குறிப்பாக புயல் காலங்களில் சொல்லவே வேண்டாம்.
சரியாக கப்பல் அந்த இடத்தை அடையும் முன் புயல் அறிவிப்பு வெளியிடப் பட்டது. கப்பலால் நிர்ணயித்த திசையில் பயணிக்க இயலவில்லை. மாலுமியும் கப்பலை அந்த வழியில் இயக்குவது இயலாது என அறிவித்து கடலின் ஆழமான பகுதிகளில் சுற்ற துவங்கினார். சும்மாவே வாந்தி மயக்கத்தில் இருந்த பயணிகளுக்கு பேதியும் இலவச இணைப்பாய் இணைந்து கொண்டது. பொது கழிவறை "நிறைந்து வழிந்தது". ஊழியர்கள் அதை சுத்தம் செய்வதும், பயணிகள் பாதையெங்கும் நாறடிப்பதும், வாடிக்கையான வேடிக்கைகள்.
ஒரு வழியாக புயல் அமைதியானது. இவ்வளவு சீக்கிரம் அது நிலைக்கு வந்தது குறித்து அனைவருக்கும் ஆச்சரியம். கார்நிக்கோபர் சென்று பின் நிக்கோபர் துறைமுகத்தை அடைந்ததும் வழக்கம் போல கஸ்டம்ஸ் பரிசோதனைகள் எல்லாம் முடிந்து வெளியேறினோம். மூன்று நாட்கள் தண்ணீரின் தாலாட்டில் இருந்ததால் எங்கள் கால்கள் இன்னும் தள்ளாடுவதை உணர முடிந்தது.
அந்தமானில் வனப் பகுதிகளும் அதில் ஆதிவாசிகளும் அதிகம் என்பதால் அவை முழுவதும் வனத்துறையினரின் கட்டுபாட்டில் இருக்கும். எங்களுக்கு இந்த பயிற்சியை ஒருங்கிணைப்பு செய்து நடத்தியது வனத்துறையினர் என்பதால் எங்கு சென்றாலும் ராஜபோக உபச்சாரம் தான். அதை கப்பலில் இருந்து இறங்கியதுமே உணர்ந்தோம், எங்கள் வலிகள் எல்லாம் அதை கண்டு பறந்தன.
புதிதாக கட்டப்பட்ட ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை ஏற்பாடு செய்திருந்தார்கள். முதன்முதலில் அதில் நாங்கள் தான் தங்கினோமாம். குளிரூட்டப்பட்ட புத்தம் புதிய அறைகள், ஸ்பிரிங் மெத்தைகள், பளபளக்கும் மார்பிள்கள் பதித்த பாத்ரூம் என எங்கு பார்த்தாலும் பணத்தை இறைத்து கட்டப் பட்டு இருந்தது. எங்கள் கப்பல் பயணத்தையும் இதையும் ஒப்பிட்டு பார்த்ததும் எங்களையும் அறியாமல் சிரிப்பு வந்தது. எங்களை சற்று இளைப்பாற சொல்லி, மாலை சிற்றுண்டி முடித்ததும் ஊரை சுற்றிக் காட்டினார்கள்.
எங்கு பார்த்தாலும் தமிழர்கள், குறிப்பாக இராமநாதபுரத்தை சுற்றியுள்ள பகுதிகாரர்கள். இந்தி ஆட்சி மொழியாக இருந்தாலும் வணிகத்தில் தமிழர்களின் ஆதிக்கமே அதிகம். நம்ம ஊர் தேநீரையும் மசால் வடையையும் மிகவும் ரசித்து அருந்தினோம். நம்மை அடையாளங்கண்டு "எந்த ஊர் தம்பி? அட நம்ம பக்கத்து ஊரு!" என உரிமை பாராட்டிய கடைக்காரர்களையும், டாக்சிக்கு ஐந்து ரூபாய் மட்டும் வாங்கிய ஓட்டுனர்களையும், போக்குவரத்து காவலர் இல்லாத இடத்திலும் சிக்னலை மதித்து செல்லும் வாகன ஓட்டிகளையும் பார்த்து வியந்தோம். நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா? என அடிக்கடி கிள்ளி பார்க்கத் தோன்றியது.
கோவா போல இதுவும் மலையும் கடலும் கைகுலுக்கும் ஓர் ரம்மியமான உலகம். எங்கு நோக்கினும் பச்சை பசேல் என தென்னை மரங்கள், வளைந்து நெளிந்து செல்லும் மலைப் பாதைகள் என கண்ணுக்கு விருந்துகள் ஆங்காங்கே. சிறிதும் பெரிதுமாக எத்தணை தீவுகள் என சரியாக தெரியவில்லை, அவ்வளவு தீவுகளின் கூட்டம் தான் அந்தமான்.
இவற்றில் மனிதர்கள் வசிக்கும் தீவுகள் சொற்பமே. பல தீவுகளில் இன்னும் மனிதர்களை வேட்டையாடும் கொடூர காட்டுவாசிகள் வசிக்கிறார்களாம். ஆங்கிலேயர்களால் கண்டு பிடிக்கப் பட்ட இந்த தீவுகளில் இருந்து இந்த காட்டுவாசிகளை சுதந்திரப் போராட்டக் கைதிகளைக் கொண்டு போரிட்டு விரட்டியடித்து முக்கிய இடங்களை கையகப் படுத்தி உள்ளனர்.
நமது தியாகிகளுக்காக கட்டப்பட்ட செல்லுலார் சிறைச்சாலையை சென்று பார்த்தோம். அங்கே அவர்கள் பட்ட கொடுமைகளை ஒலி ஒளி காட்சியாக காட்டுகிறார்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது.
நிக்கோபாருக்கு முன்பு ராஸ் எனும் தீவு தான் தலைநகரமாக இருந்திருக்கிறது. பின்பு அந்த தீவு கடலில் மூழ்க துவங்குவதாக சொல்லி நிக்கோபாருக்கு மாற்றி இருக்கிறார்கள். அந்த சிதிலமடைந்த தீவினைப் பார்க்க சிறியதொரு கப்பலில் சென்றோம். அங்கே ஆங்கிலேயர் பயன்படுத்திய பேக்கரி, நீச்சல் குளம், தேவாலயம் மற்றும் குடியிருப்புகள் என அனைத்தும் பாழடைந்து இருந்தாலும் உள்ளது உள்ளபடியே பராமரித்து வருகிறார்கள். அனைவரும் பார்க்க வேண்டிய இடம்.
அவ்வளவு அழகான அந்தமானில் எங்கு சென்றாலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நேர்த்தியான “இயற்கையை” இயற்கை மாறாமல் பராமரிக்கின்றனர்.
இவ்வளவு அழகு இருந்தால் கண்டிப்பாக ஆபத்தும் இருக்கும் தானே????
Monday, August 2, 2010
கண்ணீர் தேசம்
(குறிப்பு: அழகப்பா பல்கலையில் பயின்ற பொழுது, 1999 வருட ALUTES நிகழ்ச்சியின் சிறுகதைப் போட்டியில், இயக்குனர் "முள்ளும் மலரும்" மகேந்திரன் அவர்களால் தேர்வு செய்யப் பட்டு, அவரது கரங்களால் முதல் பரிசை பெற்ற எனது (முதல்) படைப்பு இது. போட்டி களத்தில் கொடுக்கப் பட்ட “மீன் கூடையுடன் செல்லும் பெண்களின்” ஓவியத்தை மையமாக வைத்து அரை மணி நேரத்தில் எழுதப் பட்டது.)
"ஏலா...மரியதாசு" என்றவாறு ஏஜெண்ட் சந்தானம் வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான். மரியதாசுக்கு வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். துடுப்பு வளித்து இறுகிய கைகள் ஆனால் வயிறு மட்டும் இருக்கிறேனா இல்லையா என பட்டிமன்றம் நடத்தியது.
"அய்யா!...ஏசெண்டய்யா...வாங்கய்யா..." வயதின் காரணமாக தடுமாறி எழுந்தார் மரியதாசு. "எங்கலெ வட்டிக் காசு...? அசலெத்தான் குடுக்க முடியல. வட்டியவாது ஒழுங்கா குடுக்கலாமுலெ?" தீக்குச்சியால் பற்களின் இடுக்கை சுத்தம் செய்தபடி சந்தானம் கேட்டான். பான்பராக்கோ, வெற்றிலையோ அவனது வெண்ணிற பற்களை செந்நிறமாக்கியிருந்தது.
"அய்யா...! கொஞ்சம் பொறுத்துக்கங்க... சின்னவம் இப்பதாம் பண்ணன்டாங் கிளாசுக்கு வந்துருக்காம். பிரசிடெண்டு அய்யாகிட்டம் சொல்லியிருக்கேம்... இந்த வருசம் படிப்பு முடுஞ்சதும் வேலெ வாங்கி தரதா சொல்லியிருக்காரு" சமாதனப்படுத்தினார்.
"அட போய்யா...! இவம் எப்ப சம்பாருச்சு, எங்கடனெ அடெய்க்கிறது? இதெல்லாம் கதெய்க்காவுமா...? இவனும் மூத்தவம் மாதிரி ஆயிட்டானா...என்ன பண்ணுவெ..?"
"அய்யா...." அலறினார் மரியதாசு "வேணாம்யா...ஒம்வாயாலெ அப்புடி சொல்லாதேயும்" கண்களில் நீர் கோர்த்தது.
"ஹ்ம்ம்ம்... மவராசன்...போயி சேந்து, இத்தோட வருசம் ரெண்டாச்சு...அவம் மட்டும் இருந்துருந்தா, குடும்பம் இன்னெலமெய்க்கி வந்துருக்குமாயா..." அரற்றியபடியே விசும்பத் ஆரம்பித்தார்.
"அட கடலுக்குப் போனவம், மீனோட வருவாம்னு பாத்தா... பொணமாயில்லா வந்தாம். வாடகெய்க்கு கொண்டு போன எம் படகெயுமில்லா படுபாவி சிங்களெய்ங்க கொண்டு போயிட்டானுவ... இப்பம் வாடகெ வளந்து, அசலும் வட்டியுமா பதினெஞ்சாயிரம் நிக்கு" சாமாதனப் படுத்தினான்.
"யாருய்யா நெனெச்சா? தொழிலுக்குப் போன எம்மவனெ இப்புடி சிங்களுனுங்க ஈவு எரெக்கமுல்லாமெ சுட்டுப் போட்டுட்டானுவலே..." பழுப்பு ஏறிய வேட்டியால் மூக்கை சிந்திக் கொண்டார். "அதாம்யா, ஒரு முடிவுக்கு வந்துட்டேன். சின்னவனெ இந்த பாழாப்போனக் கடலுக்கு அனுப்ப வேணாமுன்னு" தீர்க்கமாக சொன்னார்.
"எய்யா.. மரியதாசு... நல்லா யோசிச்சு பாரு... கடலுதாம் நமக்கு தெய்வம்... அதுலெ போறவனெல்லாமா சாவுறானுக? உம்மவன் சின்னவம் படுச்சி வேலெய்க்கு போயி எம்புட்டு சம்பாருச்சுறப் போறாம்..? நீயொண்ணும் ஒண்டிக் கட்டயில்லெ... வயசுக்கு வந்த பொட்ட புள்ளம், அப்புறம் ஒம் பொண்டாட்டி, இத்தென பேரும் அவம் ஒருத்தனெ நம்பி... அட... எங்கடனெ வுட்டுத் தள்ளும்யா... ஒம்மவ மேரி கலியாணத்துக்கு எதுவும் சேக்க வேணாமா..?"
" ........................"
வெளியே சென்றிருந்த மேரியும், அம்மாவும் உள்ளே வந்து ஏஜெண்டைப் பார்த்து திடுக்கிட்டனர். தலையிலிருந்த இறக்கிய மீன் கூடையின் மணம் வீட்டை இலவசமாய் நிறைத்தது. வெயிலின் கொடுமை கண்களை இருட்ட, அம்மா மண்பானை நீரை ஒரு செம்பு எடுத்து மடக்... மடக்... எனக் குடித்தாள். தண்ணீர் வழிந்து அவள் தொண்டையை கொஞ்சம் குளிர வைத்தது.
ஏஜெண்ட்டிடம் திரும்பி "வாங்கய்யா.... இப்பதாம் வந்தீயளா..?" புடைவை தலைப்பால் ஈரத்தை ஒத்திக் கொண்டாள்.
"ஏம்மா! ஒம்புருசன் ஒரு வெவரங்கெட்ட ஆளாயிருக்காம்... சின்னவனெ வேற வேலெய்க்கி அனுப்ப போறாராமுலெ.. இவெம் படிப்புக்கு எம்புட்டு சம்பாருச்சுறப் போறாம்? நீயாவது எடுத்து சொல்லி எம் படகுக்கு அனுப்பி விடு... தொழில பழகட்டும்.... நாம் பாத்து போட்டு தரேன்"
"வேணாமுய்யா... புள்ளெய்ங்க ஒவ்வொரு மொறெ கடலுக்கு போகும்போதும் உசுரு எம்ம நெஞ்சுல இல்லம்யா... எங்கய்யுலெ இருக்குயா... சின்னவனெயும் அந்த படுபாவிகளுக்கு தூக்கிக் குடுக்கம் வேணாமுயா"
அம்மா சொல்வதைக் கேட்ட மேரியும் "ஆமாயா, கஞ்சியோ ... கூழோ ... நானும் அம்மயும் மீனெ வித்து ஊத்துறம். அவம் படுச்சு சம்பாருச்சு எங்களெ காப்பாத்தட்டும்" உறுதியாக சொன்னாள்.
" சரி ... சின்னவம் வந்ததும் சொல்லி பாருங்க... இப்பம் அவனுக்கு அரப்பருட்ச லீவுதான...? ரெண்டு நாளு வந்து பாக்கட்டும் . . அப்புறம் ஒம்ம இஷ்டம்" பதிலைக் கூட எதிர்பாராமல் வேட்டியின் தலைப்பை கால்களால் லாவகமாக கைக்கு கொண்டு வந்தபடி விறுவிறுவென நடந்த ஏஜெண்ட்டை அம்மாவும் மகளும் நடுங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். மரியதாசு தரையில் அமர்ந்து கிழிந்த வலையை புலம்பியபடியே மீண்டும் தைக்கத் தொடங்கினார்.
ஆளரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தார், எதிரில் சின்னவனும் பக்கத்து வீட்டு சுந்தரும் நின்றிருந்தனர். இருவரும் பள்ளித் தோழர்கள், சிறுவயது முதலே ஒன்றாய் வளர்ந்ததால் அப்படியொரு நெருங்கிய நட்பு.
"எப்போவ் .... ஏசெண்டய்யா உங்கிட்டம் என்னவோ சொல்லியிருக்காராமுலெ? இப்பதாம் வழியில பாத்தேன் .... என்ன சொன்னாரு...?" கண்களில் ஆர்வம் மின்னியது.
"ஏலா ... நீயி ... நீ ... கடலுக்குப் போரீயாலெ?" அப்பா தடுமாறி முடிக்கு முன்னே " இல்லம்பா ... நான் படிக்கேன்" ஆர்வம் கலவரமாய் மாறியது.
"அட ... அதுக்கில்லல்லா ... இப்பம் ஒனக்கு லீவு தான? ஒரு ரெண்டு நாளய்க்கு போயி பாரும்லா ... புடிக்காட்டி வேணாம்"
அப்பாவைப் பார்க்கவும் பரிதாபமாக இருந்தது. "ஏலேய், இப்பம் லீவுதனல்லா ... நானும் வரேன் ... வாலா ... ரெண்டு பேருமா போவம்" ஆதரவாய் கைகளைப் பற்றி சுந்தர் சம்மதிக்க வைத்தான்.
அம்மாவும், மேரியும் பெரும்பாலும் கடற்கரையில் மாதா குருசடியிலேயே அமர்ந்து இரண்டு நாளையும் கழித்தனர். கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் மல்க, மேரி மாதா முன் இருவரும் மணிக்கணக்காக வேண்டிக் கொண்டனர். மூன்றாம் நாள் விடியலிலேயே எழுந்து தலையில் மீன் கூடையை சுமந்தபடி சின்னவனை எதிர்பார்த்து கடற்கரைக்கு வேகவேகமாக நடந்தனர்.
எதிரே டீக்கடையிலிருந்து சுந்தரின் அப்பா பதட்டத்துடன் ஓடிவந்தார். அவரின் பரபரப்பைப் பார்த்ததும் இருவருக்கும் வயிற்றில் அமிலம் சுரந்தது.
"மோசம் போயிட்டளா .... மோசம் போயிட்டம் ... பேப்பர்ல இப்பதாம் பாத்தேன் ... நேத்தும் ரெண்டு படகெ புடுச்சு ஆளுவள சுட்டுப் புட்டானுவளாம்... எந்த படகுனு தெரியலயே மகமாயி" தலைதெறிக்க ஓடினார்.
"அய்யய்யோ .... அய்யய்யோ ... இந்த பாவி மனுசம்கிட்ட தல தலயா அடுச்சுக் கிட்டம் ... கேக்காமெ பச்ச புள்ளயெ அனுப்புச்சானே .... எம்புள்ளய்க்கி என்னாச்சோ...? ஏட்டி ... சீக்கிரம் வாடி ..." மகளை கூட எதிர்பாராமல் கடற்கரைக்கு ஓடினாள்.
தூரத்தில் ஒரு படகு கரை வருவது தெரிந்ததும் இருவரின் கால்களும் இயந்திரத்தனமானது. படகில் இருந்தவர்களிடம் "எய்யா... எம்புள்ளயளெ பாத்தீயளா? ... என்னென்னமோ சொல்றவுகளே??" மாரில் அடித்துக் கொண்டு கதறிய அம்மாவை, கண்ணீரும் கம்பலையுமாய் மேரி தேற்றிக் கொண்டு இருந்தாள்.
"என்னவோம்மா ... நம்ம பொழப்பு நாயி பொழப்பா போச்சு ... எப்பவும் சிங்களுனுங்கதாம் சுடுவானுவம் ... இப்பம் நம்ம கடல் போலீசே ஆள் தெரியாமெ சுட்டுப் புட்டானுவம் ... எந்த படகுனு சரியா தெரியலெ ... ரெண்டு ஆளுகளுக்கு உயிர் சேதமாம்" படகிலிருந்த பெரியசாமி சொன்னார். அவருக்கு இன்னும் நெஞ்சு படபடப்பு அடங்கவில்லை.
"அட .... நாசமா போறவனுவளே .... ஒங்களுக்கு மீன் புடிக்கத்தானம்யா கடலுக்குப் போறோம் ... நீங்களே சுட்டா எப்படிம்யா??? எம்மா ... வேளாங்கண்ணி தாயே!!! எம்புள்ளெய்க்கி எதுவும் ஆகிரக் கூடாது ... பத்தரமா கரை வரனும் .... அவம் ... வருவான் ... கண்டிப்பா வரு...." துக்கம் தொண்டையை அடைக்க புலம்பினாள். மேரியும், விசும்பியபடியே சின்னவனின் படகு வருகிறதா என கடலை வெறித்து பார்த்தபடி இருந்தாள்.
கடல் அலைகள் மட்டும் அவர்களின் கால்களை ஆதரவாய் வருடி சென்று கொண்டு இருந்தது.
Monday, July 26, 2010
கடலடியில் ஒரு தமிழன் (பாகம்-4)
வணக்கம் சகா!
இதுவரை
அந்தமான் கனவு நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே சென்றது. ஒரு வருடமும் ஓடியது, ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் சேர்ந்திருந்த “இளநிலை ஆராய்ச்சியாளர்” வேலைக்காக எனக்குக் கிடைக்கும் உதவித்தொகை (STIPEND) அடிக்கடி தாமதமாகி மூன்று அல்லது நான்கு மாதங்கள் சேர்ந்து ஒருமித்து கிடைக்கும். அப்படி சம்பளம் இல்லாத ஒரு மாதத்தில் ஒரு நாள் எனது ஆசிரியர் கூப்பிட்டு “அந்தமானில் ஒரு மாதகாலம் பவளப்பாறைகள் பற்றிய பயிற்சி வகுப்பு நடைபெறப் போகிறது, ஆர்வமுள்ளவர்கள் பதிவு செய்யுங்கள்” என்றார். பயணப்படி எதுவும் கிடைக்காது சொந்த செலவில் தான் செல்லமுடியும் என்றும் அறிந்தோம்.
அந்தமான் செல்லவே நிறைய செலவாகும், இதில் டைவிங் வேறு சந்தடி சாக்கில் கற்று திரும்ப வேண்டும், சம்பளமும் இல்லை, என்ன செய்வது என்றே தெரியவில்லை. நானும், நண்பரும் முதலில் தயங்கினாலும் பின்னர் ஒரு மனதாக பயிற்சிக்கு செல்வது என முடிவெடுத்தோம். இருவரும் வீடுகளில் தயங்கி தயங்கி பணம் கேட்டோம். கல்லூரியில் படிக்கும் போது வீட்டில் பணம் கேட்க தயக்கம் இருக்காது. ஆனால், ஒரு வேலைக்கு சென்ற பின்பு மீண்டும் பெற்றோரிடம் கேட்க ரொம்பவும் கூசித்தான் போனது. எங்கள் ஆர்வம் அறிந்து, வீட்டிலும் பச்சை கொடி காட்டினார்கள்.
எனக்கு அடுத்தபடியாக முத்துராமன் எனும் தம்பியும் (எனக்கு முதுகலையில் ஜூனியர்) இளநிலை ஆராய்ச்சியாளராக புதிதாக சேர்ந்திருந்தார். அவர் இதற்கு முன் அந்தமானில் பணியாற்றியவர். எனவே, நாங்கள் மூவரும் அந்தமான் செல்ல ஆயத்தமானோம். முத்துவிடம் டிக்கெட் ரிசர்வ் பண்ணுவது பற்றி கேட்டேன். அவர் “மூன்றாம் தர வகுப்பிற்கு (3rd class) ரிசர்வேசன் கிடையாது, நேரில் போய்தான் எடுக்க முடியும், தைரியமாக கிளம்புங்கள்” என்றார். போருக்கு செல்லும் வீரன் போல வீட்டில் அனைவரும் வழியனுப்ப சென்னை வந்திறங்கி துறைமுகம் சென்றோம்.
அங்கே, மூன்றாம் வகுப்பு பயணிகளை எவ்வளவு கேவலமாக நடத்துகிறார்கள் என்று நேரில் கண்டு இரத்தம் கொதித்தது. கைக்குழந்தைகளுடனும், உடைமைகளுடனும் அனைவரும் அகதிகள் போல ரிசர்வேசன் கதவு எப்பொழுது திறக்கும் என்று கொளுத்தும் வெயிலில், தார் சாலையில் காத்துக் கிடந்தனர். எங்களைப் பார்த்து முத்து “இதற்கே மலைத்தால் எப்படி? அடுத்து ரிசர்வேசன் கவுன்ட்டர் திறந்ததும் வேடிக்கையை பாருங்கள்” என்றார்.
கவுன்ட்டர் திறந்ததும், ரஜினி படத்திற்கு முதல் ஷோ டிக்கெட் எடுக்கும் ரசிகர்களைப் போல ஒருவரை ஒருவர் மிதித்துக் கொண்டும் அடித்துக் கொண்டும் கூட்டம் திமிறியது. எங்கள் இருவரையும் உடைமைகளைப் பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு தம்பி டிக்கெட் எடுக்கக் கூட்டத்துக்குள் புகுந்தார். தனியாக செல்லும் பெண்களும், வயோதிகரும் இதில் எப்படி டிக்கெட் எடுத்து பயணம் செய்வார்கள்? என்று பிரம்மித்துப் போனேன்.
முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு இந்த பிரச்சனை இருக்காது. பணம் எளியோரை எப்படியெல்லாம் பாகுபடுத்துகிறது என நொந்து கொண்டேன். வெற்றிகரமாக டிக்கெட் எடுத்த பின்பு, ஒரு ஆள் மட்டும் நுழையும் அளவில் இருந்த வாயில் வழியே அனைவரும் முண்டியடித்து உள்ளே சென்றோம். எங்கள் லக்கேஜ் எல்லாம் அதன் வழியே எப்படி நுழைத்தோம் என்பது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.
உள்ளே நுழைந்ததும், “அண்ணே, கவனம்! உடனே பின்னே ஓடுங்கள்” என்று தம்பி முத்து உரக்கக் கத்தினார். என்னுடன் வந்தவர்களும் பக்கவாட்டில் பார்த்தபடி, அலறியடித்து பின்னே ஓடினர். நானும் அவர்களுடன் ஓடி என்னை ஆசுவாசப்படுத்துவதற்குள் ஒரு கூட்ஸ் ரயில் எங்களைக் கடந்து சென்றது. எனக்கு சப்தநாடியும் ஒரு கணம் அடங்கி விட்டது. எல்லாம் மயிரிழையில் நடந்தேறியது. மக்களுக்கு எந்த பாதுகாப்பும் முன்னறிவிப்பும் இல்லாமல், எப்படி இந்த இரயில் பாதை வழியே உள்ளே அனுப்புகிறார்கள் எனத் தம்பியிடம் கேட்டேன். “அதெல்லாம் அப்படித்தான் இன்னும் நிறைய இருக்கு, சீக்கிரம் வாங்க அடுத்த கூத்தைப் பார்க்க வேண்டாமா” என்று எங்களை தரதரவென இழுக்காத குறையாய் அழைத்து சென்றார்.
இன்னும் ஒண்ணா??? இப்பவே கண்ணக் கட்டுதே????. கஸ்டம்ஸ் என்ற பெயரில் எல்லாரையும் கிச்சு கிச்சு மூட்டி ஒரு இடத்தில் நிற்க வைத்தனர். பிரம்மாண்டமாய் நிற்கும் “நன்கொளரி” கப்பலைப் பார்த்ததும் பட்ட கஷ்டங்களெல்லாம் நொடிப் பொழுதில் பறந்தன. உள்ளே ஏறுவதற்கு மூன்று வழிகள் இருந்தன, மூன்றின் அடியிலும் டிக்கெட் பரிசோதகர்கள் வந்து நின்று தயாரானார்கள். எங்களுக்கு உள்ளே செல்ல அழைப்பு வந்ததும் ஓடிப் போய் சக பயணிகளுடன் வரிசையில் நின்றோம்.
வரிசையை சரிபார்த்துக் கொண்டு வந்த ஒரு பாதுகாப்பு காவலர், எங்கள் டிக்கெட்டை வாங்கி பார்த்து “இந்த வழி முதல் மற்றும் இரண்டாம் வகுப்புக்குரியது, அங்கே செல்லுங்கள்” என்று அடுத்த பாதையை காட்டினார். உடனே நாங்களும், எங்களுடன் நின்றிருந்த சக பயணிகளும் லக்கேஜ்களுடன் அலறியடித்துக் கொண்டு அடுத்த வழிக்குப் போனோம். அங்கே நின்றிருந்தவர் இங்கில்லை அங்கே செல்லுங்கள் என்று அடுத்த பாதையை காட்டினார்.
“வடை போச்சே” என்று நொந்து கொண்டு அடுத்த பாதைக்குப் போனால் அங்கேயும் இதே போல் தான் நாயை விரட்டுவது போல விரட்டினர். இருந்ததே மூன்று வழி, அடுத்து எங்கே செல்வது? லக்கேஜ் என்றதும் சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். ஒரு ஆளுக்கு ஒரு மாதத்திற்கான உடை, அதுபோக எங்கள் டைவிங் உபகரணங்கள் வேறு கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். நாக்கு தள்ளியது என்பார்களே அதை அன்று தான் அனுபவித்தேன்.
உடனே அனுபவசாலி முத்துராமன் அந்த காவலருடன் இந்தியில் வாக்குவாதம் நடத்தினார், அவர்கூட வேறு ஒரு சிலரும் சேர்ந்து கொள்ள சிறிது பரபரப்பு நிலவியது. இதில் என்ன கொடுமை என்றால், உயர் வகுப்பு பயணிகள் செல்லும் பாதைகள் வெறிச்சோடி கிடந்தன. ஆனால் எங்களை அனுமதிக்கவில்லை. ஒருவழியாக ஒரு இளகிய மனம்? படைத்த காவலர் வந்து உள்ளே செல்ல அனுமதித்தார். அப்பொழுது முத்து “இது ஒரு வழக்கமான கூத்து, எப்படி இருந்தது?” என்று சிரித்தார். எனக்கு டைட்டானிக் படத்தில் ஜாக் கோஷ்டி கப்பலில் ஏறும் சம்பவம் நினைவுக்கு வந்தது. படியில் ஏறும் பொழுது, மேலே நின்று வேடிக்கை பார்க்கும் பயணிகளில் ரோஸ் இருக்கிறாளா என்று அனிச்சையாய் என் கண்கள் தேடின.
என்றும் அன்புடன்
வில்சன்
Friday, July 23, 2010
கடலடியில் ஒரு தமிழன் (பாகம்-3)
வணக்கம் சகா!
இது வரை
மதுரை சென்றதும், இரு நாட்கள் கழித்து இராமேஸ்வரம் (புதுமடம்) கிளம்ப தயார் செய்து கொண்டு இருந்தோம். என்னைப் போலவே மதுரைக்கார நண்பர் மாரிமுத்து என்பவரும் முனைவர் படிப்பிற்காக சேர்ந்து இருந்தார். அவரும் என்னைப் போலவே ஒரு “நீச்சல் வீரர்?????” தான். அவர் என்னைப் பார்த்து “இவன் பெரிய ஆளாய் இருப்பானோ?” என்றும், நான் அவரைப் பார்த்து “இவன் பெரிய நீச்சல்காரனாக இருப்பானோ?” என்றும் பயந்து கொண்டு இருந்தோம்.
அவரையும், அவர் சார்ந்த மனிதர்களையும் பற்றி தனியே ஒரு பதிவு விரைவில் எழுதலாம் என்று இருக்கிறேன்.
ஒரு வழியாக புதுமடம் கிராமம் அடைந்தோம். அங்கே, எங்களுக்கு கடலில் நீந்த தேவையான கண் கண்ணாடி (மாஸ்க்), காலுக்கு துடுப்பு, ஆள் உயர இரப்பர் உடையென சகல உபகரணங்களும் இருந்தது. இதையெல்லாம், டிஸ்கவரி சானலில் மட்டுமே இதுவரை கண்டிருந்த எங்களுக்கு, ஏதோ சாதிக்கப் போகிறோம் என்று பொறி கிளம்பியது. எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அருகிலுள்ள மண்டபம் என்ற ஊருக்கு சென்று அங்கே ஒரு படகை வாடகைக்கு அமர்த்தி முயல் தீவுக்குக் கூட்டிப் போனார்கள்.
அங்கே, முட்டியளவு நீரில் இறங்க சொல்லி, பவளப்பாறைகளையும் அதன் சகவாசிகளான வண்ண வண்ண மீன்களையும் ரசிக்க சொன்னார்கள். நானும் தொபீரெனக் குதித்து “டம் . . டம் . . டம்” என நீச்சல் அடிக்கத் துவங்கினேன். நான் அடித்த அடியில் மீன்களெல்லாம் மிரண்டு ஓடிவிட்டன, தண்ணீர் வேறு கலங்கி சாக்கடை போல மாறி விட்டது. பரிதாபமாக எழுந்து நின்று பார்த்தால், எனது இரு முட்டியிலும் ரத்தம் கசிந்ததை கவனித்தேன். பின்னே? தண்ணீரே முட்டியளவு தான் இருந்தது அதில் பவளப்பாறைகள் வேறு, கிழிக்காமல் என்ன செய்யும்?. முட்டி உடையாமல் சைக்கிள் கற்றவனும், இரத்தம் வராமல் பவளப்பாறையில் நீந்தியவனும் இல்லை என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். நண்பர் மாரிக்கும் அதே நிலைமைதான் “ஒய் பிளட்? சேம் பிளட்?” என்று வடிவேல் கணக்காய் கேட்டுக் கொண்டோம்.
ஆனால், யாருக்கும் எளிதாய் கிடைக்காத ஒரு பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது என்ற நம்பிக்கையும், ஆர்வமும் எங்களை தளர விடவில்லை. தினமும் அதிகாலையில் கடற்கரையோர டீ கடையில் ஈ மொய்க்கும் போண்டாக்களை (அதற்கு வெடிகுண்டு எனச் செல்ல பெயர் வேறு) வாங்கி கட்டிக் கொண்டு (அதுதான் காலை உணவே) ஆறு மணிக்கு படகில் ஏறுவோம். திரும்ப கரைக்கு வர மதியம் ஒரு மணி ஆகிவிடும்.
ஒரு நாள், கொஞ்சம் ஆழமான பகுதியில் நீச்சலடித்து கொண்டு இருந்தோம். அந்த இடத்தின் பெயர் “பிசாசு முனை” (இராமேஸ்வரம்) பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல?. அந்த இடத்தில் எப்பொழுதும் ராட்சத அலைகள் அதிகமாக இருக்கும். பவளப்பாறைகளும் அதிகம் இருக்கும், எனவே அங்கே சென்று எனது சீனியர் ஒருவர் புகைப்படம் எடுக்க, நானும், மாரியும் அவர் அருகே சென்று நீந்தியவாறு அவர் கடலுக்கடியில் புகைப்படம் எடுப்பதை கவனித்து கொண்டு இருந்தோம். உடனே அவர் ரொம்ப பிகு பண்ணிக் கொண்டு எங்களை தள்ளிப் போகச் சொன்னார்.
பக்கத்தில் நின்றால் அவருக்கு புகைப்படம் சரியாக வராதாம். நாங்களும் சற்று தள்ளி வந்தோம். திடீரென ஒரு பெரிய அலை வந்து அவரை புரட்டிப் போட்டது. காமிரா ஒரு பக்கம் பறக்க அவர் அணிந்திருந்த முகக்கவசக் கண்ணாடிக்குள் (மாஸ்க்) தண்ணீர் ஏற மூச்சு திணறி “காப்பாற்றுங்க ... காப்பாற்றுங்க” என்று கத்தியவாறு நீரில் மூழ்க துவங்கினார். என்னையும், மாரியையும் தவிர மற்ற அனைவரும் படகில் இருந்தனர். நண்பர் மாரிமுத்துவும் சற்று தொலைவில் இருந்தார். நான் மட்டும் கூப்பிடும் தொலைவில் இருந்தேன்.
படகில் இருந்த எனது ஆசிரியர் என்னைப் பார்த்து அவனை போய் தூக்கிக் கொண்டு வாயா என்றார். நானோ ஒரு கற்றுக் குட்டி, ஏற்கனவே என்னை குளத்தில் காப்பாற்ற வந்த நண்பனையும் உயிர் பயத்தில் கெட்டியாய் பிடித்து நீந்தவிடாமல் கொல்லப் பார்த்திருக்கிறேன். அதே போல இந்த ஆளும் என்னை நீந்த விடாமல் பிடித்துக் கொண்டால்??? இருவரின் கதியும் அதோ கதிதான்.
ஆனாலும் யோசிக்க நேரமில்லை, சட்டென்று அவரருகில் சென்று அவரது புஜத்தைப் பிடித்து ஆசுவாசப் படுத்தினேன். ஒரு சப்போர்ட் கிடைத்த நம்பிக்கையில் அவரும் நிதானமானார். அவர் பாரமும் என்னை அழுத்த ஒரு வழியாய் படகுக்கு இழுத்து வந்து சேர்த்தேன். ஆசிரியரிடம் அவருக்கு செம டோஸ் விழுந்தது. அதிலிருந்தும் பல டிப்ஸ் கிடைத்தது.
நாளடைவில் பவளப் பாறைகள் மத்தியில் ரத்தம் பார்க்காமல் நீந்தும் கலையையும், மீன்களை கலவரப் படுத்தாமல் அவற்றை கண்காணிக்கும் கலையையும் கற்றுக் கொண்டேன். பெரும்பாலும் நீரின் மீது மிதந்த படி அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிப்பேன். முங்கு நீச்சலில் “தம்” பிடித்து உள்ளே சென்று வரும் கலையும் போகப்போக அத்துபடியானது. அடுத்த கட்டம், “ஸ்கூபா டைவிங்” எனும் சிலிண்டர் அணிந்து கடலுக்கடியில் செல்லும் கலையை கற்க வேண்டும்.
அதற்கான பயிற்சி தமிழகத்தில் கிடையாது. எனக்கு தெரிந்தவரை அந்தமானில் கற்றுத் தரப்படுவதாக அறிந்தேன். ஆனால், அந்தமான் சென்று வர, டைவிங் கற்க ஏராளமாய் செலவாகுமே? என்ன செய்வது? இந்நிலையில் நண்பர் மாரிக்கும் எனக்கும் ஒரே மாதிரியான எண்ணங்களும், தாகங்களும் இருந்ததால் நாங்கள் பயங்கர நெருக்கமாகி விட்டோம், இருவருமே அந்தமான் செல்லும் வாய்ப்புக்காக காத்திருந்தோம்.
அடுத்த பதிவில் அந்தமான் . . .
நன்றியுடன்
வில்சன்
Wednesday, July 21, 2010
கடலடியில் ஒரு தமிழன் (பாகம்-2)
வணக்கம் சகா!
இது வரை
அந்த அதிர்ச்சி . . . எனது சக பயிற்சி வீரர்களெல்லாம் சுள்ளான்கள்! அனைவருக்கும் ஆறு முதல் பத்து வயதுக்குள் இருக்கும். அவர்கள் அனைவரும் எனது முழங்காலுக்கு கீழே தான் இருந்தனர். நான் மட்டும் இருபத்தைந்தை கடந்தவனாய் இருந்தேன். அது போக, சுள்ளான்கள் எல்லாம் எனக்கு ஒரு வாரத்திற்கு முன்பே பயிற்சியில் சேர்ந்து, அடுத்த கட்டத்தை எட்டி இருந்தனர். நான் தத்தளிப்பதை பார்த்து அவர்கள் “அண்ணே, இப்டி அடினே, காலை அப்டி உதைனே” என்று சொல்லி கொடுக்க துவங்கினர். எனக்கு ஒரே வெட்கமாய் இருந்தது, இருந்தாலும் வேறு வழியில்லை சவாலாக எடுத்து சாதித்தேன்.
ஒரு வாரத்தில் என்னை நன்றாகப் பயிற்றுவித்தனர். பயிற்சி முடிந்ததும், பயிற்றுநரிடம் நன்றி சொல்லி விட்டு, இந்த மாதிரி நான் கடல் ஆராய்ச்சியில் ஈடுபடப் போகிறேன், இன்னும் ஒரு வாரத்தில் இராமேஸ்வரத்தில் எனக்கு நீச்சல் தேர்வு இருக்கு என்றேன். அவரோ, “நல்ல தண்ணீரில் நீச்சல் அடிப்பது வேறு, கடலில் நீச்சல் அடிப்பது வேறு, இப்பொழுது நீங்கள் கற்றது எல்லாம் கடல் கிட்ட செல்லாது” என்று தன் பங்குக்கு ஒரு குண்டை தூக்கிப் போட்டார்.
ஹ்ம்ம்ம் ... !!! கழுதைக்கு வாக்கப்படும்னு விதி! உதை வாங்காம முடியுமா? என்று எண்ணிக் கொண்டு, இராமேஸ்வரம் அருகில் உச்சிபுளியில் இருந்த எனது சகோதரி வீட்டுக்கு கிளம்பினேன். அதுவும் ஒரு கடற்கரை கிராமம் தான். அங்கு சென்று, அருகிலுள்ள காமராஜர் பல்கலையின் ஆய்வுகூடத்திற்கு (புதுமடம்) சென்றேன். அங்கே, மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர் அலுவல உதவியாளராக இருக்கிறார். எனது நேர்காணலின் போது அவரை மதுரையில் சந்தித்து இருக்கிறேன். அவரிடம் விஷயத்தை சொன்னேன்.
அதுக்கென்ன? ஒரு வாரம் டயம் இருக்கில்ல? வாங்க ஒரு கை பார்த்து விடுவொமென்று உற்சாகப் படுத்தினார். தினமும் காலையிலும் மாலையிலும் கடற்கரைக்கு அவருடன் செல்வேன். அவரை எனது மானசீக குருவாய் ஏற்று அவர் சொல்லிக் கொடுத்த நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். இரண்டாம் நாள் பயிற்சியின் போது, என்னை நீந்தியவாறு கைத்தாங்கலாய் கடலுக்குள் கூட்டிச் சென்றார். கடல் நடுவே ஒரு இரும்பு கம்பி ஒன்று ஊன்றி இருந்தார்கள், அதை பிடிக்க சொல்லி விட்டு சற்றும் எதிர்பாராமல் முங்கு நீச்சலில் கரைக்கு திரும்பி விட்டார்.
அந்த கம்பி முழுதும் சிப்பிக்கள் பிடித்து கரடுமுரடாக இருந்தது. கை வேறு ஏற்கனவே கடல் நீரில் ஊறி இருக்க, சிப்பிக்கள் கையை பதம் பார்க்கத் துவங்கின. பிடிக்கவும் முடியவில்லை, விட்டால் மூழ்கி விடுவேன் என்று பயம் வேறு. அவரை நோக்கி “முடியல . . . கை வலிக்குது...” என்று கத்தினேன். “வலிச்சா விட்டுடுங்க” என்று அவர் திருப்பிக் கத்தினார்.
இன்னிக்கு என்ன ஆனாலும் சரி, உயிரை பணயம் வைத்து விட வேண்டியதுதான் என்று கையை விட்டு விட்டு கரையை நோக்கி நீந்தினேன். அவர் கரையிலிருந்து என்னைப் பார்க்கிறாரா என்று அடிக்கடி உறுதிப் படுத்திக் கொண்டேன். அப்படியா விட்டு விடப் போகிறார்? என்று ஒரு குருட்டு நம்பிக்கையில் நீந்தி கரை சேர்ந்தேன்.
கைகள் ரெண்டிலும் ரத்தக் கீறல்கள், அதில் கடல் நீரின் உப்பும் சேர, ஒரே எரிச்சல் வேறு. அந்த ஆளைப் பார்த்து வாய்க்குள்ளேயே கெட்டவார்த்தைகளால் திட்டிக் கொண்டேன். பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் சுண்ணாம்பு எடுத்து அதில் தேங்காயெண்ணை கலந்து தேய்க்க சொன்னார். “நாளைக்கு காலைல பாருங்க பட்டுப் போயிடும்” என்றார்.
அடுத்த நாளும் அதே மாதிரி அதிரடி பயிற்சி தான். மூன்றே நாளில் முழுக்கத் தேறிவிட்டேன். நம்பிக்கை துளிர்த்தது எனது மானசீக நீச்சல் குருவிடம் நன்றி சொல்லி மதுரை கிளம்பினேன். அங்கிருந்து மீண்டும் இராமேஸ்வரம் போக வேண்டும்.
அடுத்த பதிவில் இராமேஸ்வரம் போவோமா? . . . .
நன்றியுடன்
வில்சன்
Labels:
அனுபவங்கள்
|
12
comments
Tuesday, July 20, 2010
கடலடியில் ஒரு தமிழன் (பாகம்-1)
வணக்கம் சகா!
பயணக்கட்டுரைகள் எழுதுவதும், வாசிப்பதும் ஒரு அலாதியான அனுபவம் தான். அனைவருக்கும் வாய்க்காத சில அரிய வாய்ப்புக்கள் ஒரு சிலருக்கு மட்டும் அபூர்வமாகக் கிட்டும். அப்படி ஒன்று எனக்கு கிடைத்திருப்பதும் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு தளம் கிடைத்ததும் எனது பாக்கியம்.
இதை நான் எழுத ஆயத்தமாகும் போது எனது வலையுலக தோழர்களிடம் இது சரியாக வருமா என சோதித்தேன், அவர்களிடம் இருந்து ஆரோக்கியமான பதில்கள் கிடைத்ததால் இதனை எழுத எத்தனிக்கிறேன். இதை ஒரு சுயபுராணமாக தம்பட்டம் அடித்து கொள்வதற்காக எழுதவில்லை, அப்படி எங்கேனும், யாருக்கேனும் தோன்றினால் தயவு செய்து சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்.
சரி, இனி (கடலுக்குள்) தொடருக்குள் பயணிப்போமா???
நானும் ஒரு காலத்தில் அனைவரையும் போல, தண்ணீரில் நீந்தும் மீன்களையும், நண்பர்களையும் கரையிலிருந்து ரசித்தவன் தான். ஒரு முறை பட்டப்படிப்பின் போது (விலங்கியல், APSA கல்லூரி, திருப்புத்தூர்) NSS முகாமில், குளத்தில் குளிக்கச் சென்று தண்ணீரில் மூழ்கி நண்பர்களால் காப்பாற்றப் பட்டு உயிர் பிழைத்த அனுபவமும் உண்டு. அதிலிருந்து “சீ ... சீ ... இந்த பழம் புளிக்கும்” என ஒதுங்கி விட்டேன்.
பிறகு, பட்டமேற்படிப்பிற்காக, காரைக்குடி அழகப்பா பல்கலையில் சேர்ந்த பொழுதும் (கடலியல் படிப்பு), படிப்பின் நிமித்தம் அடிக்கடி கடற்கரைக்கு சென்ற போதும் எனது கடல் ஆர்வம் கரையோடு தான் இருந்தது. படகில் ஆய்வுக்காக செல்லும் போதெல்லாம் உயிரை கையில் பிடித்து கொண்டு தோழிகள் முன் பயத்தை வெளிகாட்ட முடியாமல் பட்ட அவஸ்தைகள் இருக்கிறதே . . . அப்பப்பா !!!.
இவையெல்லாம், கொஞ்ச நாட்களுக்குத் தான். பட்டமேற்படிப்பு முடித்து, முனைவர் படிப்பிற்காக, மதுரை காமராஜர் பல்கலையில் நேர்முகத் தேர்வுக்கு சென்றேன். நான் தேர்வு செய்யப் பட்டதாகவும், ஆனால் இரு வாரம் கழித்து இராமேஸ்வரத்தில் நீச்சல் தேர்வு இருக்கும் எனவும் அறிவிக்கப் பட்டது.
அரைமனதாக சொந்த ஊருக்கு வந்தேன் (திருப்புத்தூர்). ஊரில் நீச்சல் பழகலாம் என்றால் குளங்கள் நிறைய உண்டு ஆனால் எதிலும் தண்ணீர் இல்லை அவ்வளவு வறட்சி!. அப்பொழுது தான், அருகில் காரைக்குடியில் ஒரு நீச்சல் குளம் புதிதாகத் துவங்கி உள்ள செய்தி அறிந்தேன். உடனே அங்கு சென்று, எனக்கு ஒரு வாரத்தில் நீச்சல் கற்று தர முடியுமா? எனக் கேட்டேன். அவர்களும், உங்களுக்கு ஆர்வமிருந்தால் ஒரு நாளில் கூடக் கற்றுக் கொள்ளலாம் என்று ஆர்வப்படுத்தினர்.
அடுத்த நாள் அதிகாலை, அவர்கள் கூறிய படி நீச்சலுடை அணிந்து சென்றால், ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அது . . . அடுத்த பதிவில் . . .
நன்றியுடன்
வில்சன்
Labels:
அனுபவங்கள்
|
15
comments
Wednesday, July 14, 2010
கடவுள் இருக்கிறார்
இந்த தலைப்பை பார்த்ததும் அநேகருக்கு குஷியாக இருக்கும் (வறுத்தெடுக்க ஒருத்தன் சிக்கிட்டான்டா) என்று. ஆனால், அதுதான் உண்மை! கடவுள் இருக்கிறார்!!. குரங்கிலிருந்து மனிதன் வந்தான், பிரபஞ்சத்தில் நடைபெற்ற அணுக்களின் மோதலால் உயிர்கள் உருவாகின என்பதெல்லாம் ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப் பட்டிருக்கின்றன.
இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் அதாவது கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற விதண்டாவாதங்களுக்கு மத்தியில், எல்லாவற்றிற்கும் ஒரு மூலம் உண்டு, அந்த ஆதிமூலம் தான் கடவுள். விஞ்ஞான வளர்ச்சியால் நிலவில் கால் வைத்தவன் கூட முதலில் கடவுளுக்கு நன்றி சொன்னேன் என்கிறான். சரி, கடவுளை அவனை யார் கண்டது? எங்கே கடவுளை என் முன்னாள் வரச்சொல்லுங்கள் பார்ப்போம் என பலர் கூவலாம். கடவுள் என்பதை பிரித்தால் “கட-உள்” என வரும். உள்ளத்தைக் கடந்து ஆழமாய் பயணித்து பார்த்தால் புரியும். ஒவ்வொருவரின் உள்ளமும் கடவுள் வாழும் ஆலயமே என்று.
இறைவன் எங்கும் நிறைந்தவன் “காற்றைப் போல” உணர முடிந்தவர்களுக்கு அவன் ஒரு ஒப்பற்ற அனுபவம். இன்று நாத்திகம் பேசும் பலரும் “கோயில் வேண்டாம் எனச் சொல்லவில்லை, அது கொடியவர்களின் கூடாரம் ஆகிவிட கூடாது என்று சொல்கிறேன்” என்றும் “கடவுள் இல்லையென்று சொல்லவில்லை இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறேன்” என்றும் சப்பைக் கட்டு கட்டுவர்.
கடவுள் மறுத்த பெரியார் கூட, ஒரு குறிப்பிட்ட மதத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார் என்பது வரலாறு. அதற்கு அவர் கூறிய விளக்கம், இந்த மதத்தில் சாதி பாகுபாடு இல்லை, அனைவரும் ஒரே நிலையில் மதிக்கப்படுகின்றனர் என்பதாகும். ஆக, மிகப் பெரிய நாத்திகவாதிகளின் கடவுள் மறுப்பு என்பது இறைவனின் பெயரால் மனிதனை கொடுமைப் படுத்தும் அவலத்தை களையவே. இவர்களும் ஏதோ ஒரு தருணத்தில் கடவுளைக் கடந்துதான் போகின்றனர்.
ஆனால், மதத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளை மலிய விடக் கூடாது. அந்த “மதம்” நமது மனத்தில் இருக்க வேண்டுமேயொழிய மண்டைக்குள் ஏறக் கூடாது. மதம் யானைக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் தலைக்கேறினால் விளைவுகள் விபரீதமாகும்.
இருப்பினும், சமயம் என்பது மனிதனை பண்படுத்துகிறது, நமக்கு மேலே ஒரு சக்தி உண்டு என நினைப்பவன், நேரிய பாதையில் செல்வான். ஒரு பயம் இருக்கும், நம்மை ஒரு சக்தி காக்கின்றது அது நம்மை எப்போதும் பார்த்துக் கொண்டு இருக்கின்றது என்று எண்ணி தவறு செய்ய மாட்டான். உடனே ஒரு கேள்வி எழும், நாத்திகம் பேசும் நாங்களா கோயிலை இடிக்கிறோம்? மதத்தின் பெயரால் எத்தனை எத்தனை வன்முறைகள்? இதைத்தான் உங்கள் கடவுள் விரும்புகிறாரா என்று.
பக்குவமில்லா அரைவேக்காட்டு ஆசாமிகள் மலிவான விளம்பரத்திற்காக தூண்டிவிடும் செயல்கள் இவையென்பது உங்களுக்கு தெரியாதா? ஒரு அரசியல் கட்சி பிரபலமாக வேண்டும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக மதத்தின் பெயரால் ஆடிய ஆட்டத்தின் உள்நோக்கம் என்ன? கோயில் கட்டுவதா? இல்லை ஆட்சியை பிடிப்பதா?
அடுத்தது சாமியார்கள், இவர்களைப் பற்றி பேசினாலே நமக்கு ஏதோ ஆபாசப் படம் பார்க்கிற உணர்வு வரும். மக்களின் மனது, ஒரு தூய வெண்ணிற வேட்டியில் இரு சொட்டு மை இட்டால் அதைத்தான் காணும். அது போல ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற துறவிகளை மறக்கடிக்கப் படுகிறோம். துறவி என்பவர் முற்றும் துறந்தவராய், ஒட்டிய வயிறும் ஒடிசலான தேகமும் கொண்டு இருப்பார். பசித்திருப்பார், எப்போதும் இறைவனை நினைத்து, தியானித்து, தவம்செய்து, கிட்டத்தட்ட ஒரு யாசகனைப் போல இருப்பர். ஆனால், ஏக்கர் கணக்கில் ஆசிரமம், சிஷ்ய கோடிகளின் புதிய சூழ ஆடம்பர பவனி, இவையெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனியென போலிகளை அடையாளம் காட்டும்.
“பன்னாடை” என்னும் ஒரு சொல் வழக்கு உண்டு, அதை பெரும்பாலும் நாம் திட்டுவதற்கு பயன்படுத்துகிறோம். அதன் பொருள் “வடிகட்டி” என்பதாகும். பனை மரத்தில் பதநீர் இறக்கும் போது அதில் உள்ள கசடுகளை நீக்க பயன்படும் வடிகட்டியின் பெயர் தான் பன்னாடை. அதன் பணி என்ன? அருமையான பதநீரை விட்டு விட்டு அழுக்கினை பிடித்து வைத்துக் கொள்ளும். அதுபோல, எது ஆகாததோ அதை பிடித்துக்கொண்டு நாமும் பல சமயங்களில் பன்னாடையாக இருக்கிறோம்.
ஒரு நீதி கதை உண்டு, ஒருவன் கடலுக்கு மீன் பிடிக்க கிளம்பும் தன் நண்பனிடம் கேட்கிறான், “உனது தாத்தா எப்படி இறந்தார்?” அவன் கூறினான் “படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி இறந்தார்”. “சரி, உனது அப்பா எப்படி இறந்தார்?”, “அவரும் அப்படித்தான் மூன்று நாட்கள் கழித்துதான் அவரது சடலம் கிடைத்தது” என்றான். இவனுக்கு ஒரே ஆச்சரியம், “உனது குடும்பம் முழுவதும் கடலில் மூழ்கி இறந்தும் உனக்கு கடலைப் பார்த்து பயமில்லையா?” என்றான். அவன் திருப்பி கேட்டான், “உனது தாத்தாவும், அப்பாவும் எப்படி இறந்தார்கள்?”. “அவர்கள் மூப்பெய்தி, நோய்வாய்பட்டு படுக்கையில் கிடந்து இறந்தார்கள்” என்றான். அப்போ படுக்கையை பார்த்தால் உனக்கு பயமாக இல்லையா?.
இக்கதையின் நீதி என்ன? அதை உணர முடிந்தவர்கள் உணர்ந்து கொள்ளுங்கள். அய்யகோ, சுனாமி வந்து எல்லோரும் சாகிறார்கள், நிலநடுக்கத்தால் பலபேர் மடிகின்றனர். இந்த கடவுள் எங்கே? இருந்தால் இப்படி நடக்குமா? அதற்கு பதில் “எல்லாம் நன்மைக்கே”. நாத்திகரின் பாணியில் சொன்னால் “Ecological Balance” என ஆங்கிலத்தில் சொல்வார்களே அப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.
ஆத்திகவாதிகள், நாத்திகவாதிகளின் உரத்த குரலுக்கு அடங்கி போவது எதனால் என்றால், தனி மனித தாக்குதல் மூலம் மனதை காயப்படுத்துவதால். உதாரணத்துக்கு, என்னிடம் நிறைய பேர் கிண்டலடிப்பார்கள், ‘பரிசுத்த ஆவி என்கிறாயே? அதில் இட்லி வேகுமா’ என்று. எனக்கு சுரீரெனக் கோபம் வரும். எனது தாயைப் பழித்தது போல் இருக்கும். ஆனால் இப்பொழுது பண்பட்டு விட்டேன். ஒருவரின் மத நம்பிக்கையில் விளையாடுவதும், புண்படுத்துவதும் ஆயிரம் ஆயிரம் கோயில்களை இடிப்பதற்கு சமமல்லவா?
இப்பொழுதும் சில நாத்திக நண்பர்களிடம் விவாதம் செய்வேன், அவர்கள் அனைவரின் கேள்வியும் கடவுள் இருக்கிறார் என்று கண்ணால் கண்டால் தான் நம்புவோம். இதே கேள்வியை நரேந்திரன் கேட்டான் விவேகானந்தர் ஆனார். அதே போல் நீங்களும் உங்களுக்குள்ளே கேளுங்கள் மனம் பக்குவப்படும். மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போல எங்கெங்கோ நடக்கும் நிகழ்வுகளுக்கு முடிச்சு போட்டு இறைவனை பழிக்காதீர்கள்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுங்கள், செய்யும் தொழிலே தெய்வம், அதனால் செய்யும் தொழிலை நேசியுங்கள். இவைகள் எல்லாம் நாத்திகரும் ஆத்திகத்தை தேடும் வழிகள். இறைவனை தேடுங்கள் பண்படுங்கள்.
உங்கள் கருத்துக்களும் விமர்சங்களையும் வரவேற்கிறேன்
என்றும் அன்புடன்
வில்சன்
Labels:
சிந்தனைகள்
|
40
comments
Friday, July 9, 2010
இயந்திரப் பறவை - பாகம் 3
இதுவரை
எனக்கு கண்ணயிருட்டிகிட்டு வந்துச்சு, அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுனே தெரியல. ரொம்ப நேரங்கழிச்சுத்தான் முழிச்சேன். சுத்திப் பார்த்தா ஒரே புகைமண்டலமா இருக்கு. என்னை கூப்புட வந்தவுங்க எல்லாம் அங்க எனக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோனு பதறிகிட்டு இருப்பாங்கனு நினைக்கிறப்போ, அழுகை அழுகயா வருது. ரொம்ப கஷ்டப்பட்டு அப்படியே ஊர்ந்து ஊர்ந்து மேலே வந்தேன்.
ரொம்ப நாள் கழிச்சு என்னைப் பார்க்கப் போற சந்தோஷத்துல வந்த எல்லாரும் இப்போ கண்ணீரும் கம்பலையுமா நிக்கிறதை கற்பனை செஞ்சு கூடப் பாக்க முடியலை. எனக்கு மட்டுமா? இன்னும் எத்தனை பேருக்கு என்னென்ன கவலையோ? தங்கச்சிக் கல்யாணத்துக்கு நகை கொண்டு வர்ர அண்ணன், ஜப்திக்குப் போற வீட்ட மீட்க வர்ற பையன், பொறந்து ரெண்டு வருஷமானப் புள்ளைய மொதல்முறையாப் பார்க்கப் போற அப்பானு எல்லாருடைய வாழ்க்கையும் ஒரு நிமிஷத்துல மாறிப் போயிருச்சு.
அப்படியே நகர்ந்து இன்னும் கொஞ்சம் முன்னேறினேன். தூரத்துல போலீஸ்காரங்க நிறையப் பேரு ஆளுங்களை தேடியெடுத்துக் கிட்டு இருக்காங்க, சக்தியெல்லாம் கூட்டி கத்துறேன், ஆனா யாருக்கும் கேக்கலை. அந்த கூட்டத்துல அப்பாவும் அண்ணனும் என்னைப் பதட்டத்தோட அங்கயும் இங்கயும் தேடி ஓடுறது மங்கலா தெரியுது. உடம்புல மிச்சமுள்ள சக்தியெல்லாம் கூட்டி முன்னேறினேன். இப்போ எனக்கு வலி படிப்படியா கொறையற மாதிரியிருக்கு, எந்திரிக்க முடியுது, எந்திருச்சு வேக வேகமா அவங்கப் பக்கத்துல ஓடுறேன்.
"அப்ப்ப்பாபாஆஆஆ" னு ஏர்போர்ட்டே குலுங்க கத்துறேன். ஸ்டெரச்சர்ல போறவங்கள்ள என்னைத் தேடிக்கிட்டுயிருந்தவரு, சட்டுனு நிமிர்ந்து பார்த்த்துட்டு மறுபடியும் குனிஞ்சு தேட ஆரம்புச்சுட்டார். எனக்கு கண்ணீரும் அழுகையும் பொங்கிகிட்டு வருது, உடம்பெல்லாம் அழுக்காவும், கரியாவும் இருக்குறதுனால அடையாளம் தெரியல போல.
அண்ணனைப் பார்த்து ஓடுறேன், கொஞ்சம் தொலைவுலயிருந்த எங்க அம்மாகிட்ட போய்கிட்டு இருக்கான். அம்மா பக்கத்துல என் சம்சாரம் மயக்கமா கெடக்குறது தெரிய, அங்கிட்டு ஓடுறேன். பக்கத்துல போய், அம்மா முன்னாடி போய் அப்படியே முட்டிப் போட்டு உக்காந்து மூச்சு எளைக்க, எளைக்க, அவங்களைப் பார்த்து "அம்மா . . . உங்க புள்ளை வந்துட்டேம்மா" னேன். என்னை வெறிச்சு பார்த்துகிட்டேயிருக்குறாங்க எந்த சலனுமில்லை. அப்போதான் எனக்கு லேசா சந்தேகம் வந்துச்சு.
மயக்கமா கெடக்குற சம்சாரத்தப் பார்த்தேன். ஆதரவா அவள் தலைய கோதி விடப் பார்த்தா... கை அவ மேல படவேயில்லை. அதுக்குள்ள அண்ணன் வந்து "மோசம் போயிட்டோம்மா, நம்ம எல்லாரையும் தவிக்க விட்டுட்டு தம்பி போய்ட்டாம்மா . . அவன் கருகி கெடக்குற லெட்சணத்தை வந்து பாருமா" னு கதறுறான். என்னால நம்பவே முடியலை, கிள்ளி பார்த்தா முடியலை, கத்துறேன், கதறுறேன், யார் காதுலயுமே விழலை.
அப்போ, எங்களை தாண்டிப் போன போலீஸ்காரங்க "பைலட் மேலதான் தப்புப்பா. கண்ட்ரோல் ரூம்லயிருந்து சொல்றதை கேக்காம, பிளேனை திரும்ப மேலயேத்தி இப்படி பண்ணிட்டாரு. அதுனால பாவம், அவர் குடும்பத்துக்கு சேர வேண்டிய காசக் கூட நிப்பாட்டிருவாங்க" னு பேசிக்கிட்டாங்க.
நான் பக்கத்துல போய் கத்துறேன் " அய்யா, தப்பெல்லாம் எம்மேலதான்யா, நான் செல்போன்ல பேசுனதுனாலதான் அவருக்கு கண்ட்ரோல் ரூம் வயர்லெஸ் சரியா கேக்கலை, அந்தாளு பொண்டாட்டி புள்ளைங்களை தவிக்க விட்டுறாதீங்க...."
என்ன பிரயோசனம்? நாம்பாட்டுக்கு கத்திக்கிட்டேயிருக்க வேண்டியதுதான், எனக்கு உரித்தானவுங்களுக்கே நான் பேசுரது கேக்கலை, மத்தவுங்களுக்கு எப்படி கேக்கும்?. கடைசியா எங்குடும்பத்தை ஒரு தடவை பார்த்துட்டு அப்படியே மேலே பறக்குறேன். என் கண்ணீரைத் துடைக்க மேகங்கள் கூட இப்போ இல்லை.
தங்கள் ஆதரவிற்கு நன்றியுடன்
வில்சன்
Labels:
கதை
|
12
comments
Thursday, July 8, 2010
இயந்திரப் பறவை - பாகம் 2
என்னை கை பிடித்து இழுத்து வந்து, உங்களுக்கு அறிமுகப் படுத்தி, ஓரமாய் நின்று புன்னகை செய்யும் என் அன்பு நண்பனும், கல்லூரித் தோழனுமான, மாப்ஸ் தேவாவுக்கு நன்றி சொல்லி . . . முதல் கதையிலேயே என்னை பிரபல பதிவர் அந்தஸ்துக்கு உயர்த்திய உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வணங்கி நன்றியுடன் பயணிக்கிறேன்.
அன்புடன்
வில்சன்
முன் கதை
ஒரு வழியா துபாய் வந்து வேலையில சேர்ந்தேன். ஒரு வருஷமும் ஓடிருச்சு, ஊருக்கு போக லீவு குடுத்தானுங்க. நமக்குத்தான் பிளேன்ல போய் அனுவம் வந்துருச்சுல...உடனே ஏஜெண்ட்கிட்ட போய் ஜன்னல் ஓர சீட்டா ரிசர்வ் பண்ணச் சொல்லி டிக்கெட்ட வாங்கிக்கிட்டேன் (எல்லாம் சக பயணி குடுத்த ஐடியாதான்).
உள்ளே ஏறி உக்காந்து, வீட்டுக்கு போனப் போட்டு “அப்பா பிளேன் ஏறிட்டேன், இன்னும் மூணு மணி நேரத்துல லேண்டாயிருவேன்” னு ஆத்தா நான் பாசாயிட்டேன் கணக்கா கத்தினேன். செல்போனை எல்லாம் அணைக்க சொல்லி மைக்ல சொல்லியும் ரொம்ப பேரு சட்ட பண்ணவே இல்ல. உள்ள இருந்த எல்லாருக்குமே பிளைட் அனுபவம் இருந்ததால அந்த பொண்ணுங்க பாடு ரொம்ப திண்டாட்டமாயிருந்துச்சு. ஏனோ இப்ப அந்த பொண்ணுங்க மேல எனக்கு பரிதாபம் வரலை.
ஒரு வழியா பிளேன் ஒரு வட்டமடுச்சு வானத்துல ஜிவ்வுனு ஏறுச்சு. வயிரெல்லாம் கூச, ஜன்னல் வழியா கட்டடங்கள் எல்லாம் சின்னதாகி ஒரு புள்ளியா மறைய ஆரம்பிக்கிறதைப் பார்த்துக்கிட்டு லைட்டா கண்ணசந்தேன். நெனப்பு எல்லாம் ஒரு வருஷம் கழிச்சு பார்க்கப் போற சம்சாரத்த சுத்தியே வந்துச்சு, இந்நேரம் அப்பா, அம்மா, மாமனார் வீடுனு ஒரு பட்டாளமே கிளம்பி ஏர்போர்ட்டுக்கு வந்துகிட்டுயிருக்கும்.
நல்லா தூக்கத்துல இருந்தவனை "எல்லாரும் பெல்ட்ட போட்டுக்கங்க ஊர் நெருங்கிருச்சு" னு மைக் அலறி எழுப்பி விட்டுச்சு. வெளியே எட்டிப் பார்த்தேன், மேகங்களின் உள்ளாற பிளேன் போறதைப் பார்க்கும்போது, அது தேங்காப்பூத் துண்டுலத் தலையத் துவட்டிக்கிற மாதிரியிருந்துச்சு.
நல்லா தூக்கத்துல இருந்தவனை "எல்லாரும் பெல்ட்ட போட்டுக்கங்க ஊர் நெருங்கிருச்சு" னு மைக் அலறி எழுப்பி விட்டுச்சு. வெளியே எட்டிப் பார்த்தேன், மேகங்களின் உள்ளாற பிளேன் போறதைப் பார்க்கும்போது, அது தேங்காப்பூத் துண்டுலத் தலையத் துவட்டிக்கிற மாதிரியிருந்துச்சு.
கட்டடங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா தெரிய ஆரம்பிக்க, மனம் தனியே பறக்க ஆரம்பிச்சுருச்சு. ஏர்போர்ட்டுக்கு பக்கத்துல பிளேன் நெருங்கும் போது மறுபடியும் வெளியே பார்த்தேன், பிளேன்ல உரசுர அளவுக்கு நிறைய செல்போன் டவர்கள் இருந்துச்சு. விஞ்ஞானம் வளர வளர உலகம் ரொம்பத்தான் சுருங்கிப் போயிருச்சு.
ஒரு காலத்துல எங்க ஊர் போஸ்டாபிஸ்ல மட்டும்தான் போன் இருக்கும். மிலிட்ரிகாரங்க வீட்டுக்கும், மலேயாகாரங்க வீட்டுக்கு மட்டும் எப்பவாச்சும் போன் வந்துருக்குனு கூப்புட்டு விடுவாங்க. இப்ப என்னடானா பூ விக்கிற ஆயாலருந்து எல்லார் கையிலயும் செல்போன் புழங்குது.
இப்படி யோசிக்கும் போதே சட்டுனு ஒரு ஐடியா வந்துச்சு. அது வேறொண்ணுமில்ல... அதுதான் டவர் எல்லாம் பக்கத்துல தெரியுதே... அப்போ கண்டிப்பா செல்போனுக்கு சிக்னல் கிடைக்கும். எறங்குறதுக்கு முன்னாடியே போன் பண்ணி வீட்ல ஆச்சரியப் படுத்துலாமுனு ஒரு சூப்பர் பிளான் (எப்பூடி?)
உடனே போன எடுத்து ஆன் பண்ணேன், சிக்னல் ஃபுல்லா இருந்துச்சு, அட! நமக்கு கூட மூளை வேலை செய்யுதேனு பெருமைப் பட்டுகிட்டேன். நம்பர டயல் பண்ணி காதுல வச்சேன், ரிங் போற மாதிரி தெரியல. அதுக்குள்ள பிளேன் ரன் வே கிட்ட வந்துருச்சு . . அடச் சே . . பறக்கும் போதே போன் பண்ணி அசத்தலாம்னா இப்படி சதி பண்ணுதேனு நொந்துகிட்டே ரீடயல் போட்டேன்.
அப்போ தீடீருனு பிளேன் குலுங்குச்சு, பயங்கர சத்தம் வேற, ஒன்னுமே புரியல. இறங்குன பிளேன் மறுபடியும் மேலே கிளம்புர மாதிரியிருந்துச்சு, பார்த்தா ரன் வேயை தா...ண்....டி.... காம்பவுண்ட் செவுத்துல மோதி நான் உக்காந்துருந்த சீட் கிட்ட கரெக்ட்டா ரெண்டு துண்டா ஒடஞ்சுச்சு. நான் பயந்து போய் பெல்ட்ட கழட்டிட்டு அப்படியே கீழ குதிச்சேன். ஒரு செகண்டுதான், பிளேன் பயங்கர சத்தத்துல வெடிச்சு சிதறிருச்சு.
- நாளைக்கு கண்டிப்பாக நிறைவு பெறும்
அன்புடன்
வில்சன்
Labels:
கதை
|
15
comments
தமிழ் படவுலகம் என்ன செய்ய போகிறது?
முன்குறிப்பு:
என்னடா இவன் ஹைதர் அலி காலத்து, இறந்து, பழுத்த செய்திக்கு இப்போ பிளாக் எழுதுறானே இவ்வளவு நாளா உள்ள இருந்தானானு குழம்ப வேண்டாம். இது தான் நான் எழுதிய முதல் பதிவு. வேறு பிளாக்கில் எழுதியதை, உங்களுக்காக இங்கு கொணர்ந்துள்ளேன். சிரமத்திற்கு மன்னிக்கவும் . . . .
------------------------------------------------------------------------------------------------------------
நடிகைகளை பற்றி அவதூறாக எழுதியதாக தினமலர் நாளிதழுக்கு எதிராக கண்டன கூட்டம் நடத்தி தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு போய் தண்டனையும் வாங்கி கொடுத்த தமிழ் படவுலகம் இப்பொழுது என்ன செய்ய போகிறது?
கூட்டத்தில் பேசிய ரஜினி வழக்கம் போல் முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு " நான் கோபமா இருக்கும் போதும் . . ஷந்த்தோசமா இருக்கும் போதும் அதிகம் பேச மாட்டேன்" அப்டீனு வழக்கமான பன்ச் டயலாக்கோடு ஆரம்பித்து, அவங்க (நடிகைகள்) வயத்து பிழைப்புக்காக செய்றாங்க... அதுனால பத்திரிக்கையில் எழுதும் போது தயவு செஞ்சு போட்டோ போடாதீங்கனு!!! அரங்கத்தை அதிர வைத்தாரே? இப்பொழுது வீடியோவே வெளியிட்டுள்ள ஆளுங்கட்சியின் ஆதரவு தொலைக்காட்சியை என்ன செய்ய போகிறார்? (வழக்கம் போல கோபமா இருக்கேன்னு சொல்லிட்டு பேசாம இருக்க போராரோ? )...
விவேக் ஒரு படி மேலே போய் தினமலர் நிருபரை அசிங்கமாக திட்டி உன் வீட்டு அட்ரஸ குடுரா.... நான் உன் வீட்டு பொம்பளைங்க குளிக்கிறதை (குறிப்பாக உங்க ஆயாவை) போட்டோ புடிகிகிறேன்னு சவுண்டு விட்டாரே?? இப்போ கலாநிதி மாறன் கிட்ட ஆயா அட்ரஸ் கேக்க முடியுமா? (கலைஞர் கடுப்பாயிடுவாருல???).
எனக்கு ஒரு விசயம் மட்டும் புரியல . . . சாமியாருங்க வலையில் ஈசியா விழுகிறார்களே? ஒரு வேளை சாமியார் கிட்ட உறவு வச்சுகிட்டா புண்ணியமுனு நினைக்கிறார்களோ?? "குளத்துள குளிக்கும்போது கொக்கு என்ன பாக்குமுனு குத்த வச்சு குளிச்ச பொண்ணு நானு . . ." அப்டினு தமிழச்சினு ஒரு படத்துல ரஞ்சிதா குளத்துல குளிச்சிகிட்டே பாடுவாங்க . . .
மும்பைகார குஷ்புவுக்கு எதிராய் முழங்கிய என் மக்காள் . . இப்போ இந்த தமிழச்சியை என்ன செய்யப் போரீங்க??? ஆவேசமாய் எல்லாரும் அந்த சாமியார மட்டும் காய்ச்சு காய்ச்சுனு காய்ச்சி எடுக்குறாங்க, இந்த பொண்ண ஒன்னும் சொல்ல மாட்டேங்குறாங்களே? ஒரு வேளை ரஜினி சொன்ன மாதிரி வயத்து பிழைப்புக்காக செஞ்சுடுச்சுனு விட்டுடாங்க போலயிருக்கு.
அன்புடன்
வில்சன்
Labels:
சினிமா
|
1 comments
இயந்திரப் பறவை - பாகம் 1
எங்க ஊரு பெரிய சிட்டியெல்லாம் கெடயாது, சாதாரண டவுன் தான். அதுனால ஏரோப்பிளேனயெல்லாம் நாங்க பார்க்குறதுக்குனா, மதுரைக்குப் போனா தான் உண்டு. எப்பவாச்சும் காரைக்குடி யுனிவர்சிட்டி விழாவுக்கோ, இல்லாட்டி தேர்தல் கூட்டத்துக்கோ ஹெலிகாப்டர் எங்க ஊர் வழியா போகும். அந்த சத்தம் கேட்டா போதும், எல்லாருக்கும் குஷிதான், சாப்புடுற சோத்தக் கூட அப்படியே விட்டுட்டு பொட்டலுக்காவது இல்லாட்டி மொட்டமாடிக்காவது ஓடுவோம். ஸ்கூல்ல சமயத்துல கூட அப்படிதான். எங்களுக்கு முந்திக்கிட்டு டீச்சர் ஓடுவாங்க. இதுல வயசு வித்தியாசமெல்லாம் கெடயாது. எல்லாரும் ‘ஆஆ’- னு அன்னாந்து பார்த்து ஆளாளுக்கு ஒரு ஏரோப்பிளேன் கதய அள்ளி விடுவாங்க. நாங்கூட பசங்க கிட்ட ‘என்னப் பார்த்து ராஜீவ் காந்தி கையக் காட்டுனாரு’னு அளந்து விடுவேன். அதயும் கேக்க ஒரு கூட்டம் ஆர்வமா இருக்கும். அதுக்கும் ஒரு காரணம் இருக்கு, எங்க ஊருல ரெண்டு மூணு வீட்டுலதான் மொட்ட மாடி ரொம்ப உயரமா இருக்கும். அதுனால பசங்க எல்லாரும் எங்க மாடியில இருந்துதான் எப்பவும் பிளேன் பார்ப்போம். ராத்திரியில அப்பா அம்மா கூட மாடியில நெலாச்சோறு சாப்புட்டுக் கிட்டே ரொம்ப உசரத்துல நட்சத்திரம் மாதிரி மினுக்கிட்டே அமைதியா போறத கண்கொட்டாம ரசிப்பேன். அப்பாகிட்ட அடிக்கடி நான் கேக்குறதுலாம் ஒண்ணே ஒண்ணுதான் 'எப்பப்பா என்னை அதுல கூட்டிட்டு போவீங்க?'
என்னை சமாதானப்படுத்த ஒரு பொம்மை பிளேன் வாங்கி குடுத்தாரு. அது பறக்காது, ஆனா, அச்சு அசல் பிளேன் மாதிரியே சத்தம் குடுத்துக்கிட்டு சுத்தி சுத்தி வரும். ரொம்ப நாள் வரை அதை பத்திரமா வச்சுருந்தேன். இப்படி, என்னோட பிளேன் காதல் அடங்கவேயில்ல. பெரியாளானதும் ஒரு தடவையாவது அதுல பறக்கனுமுனு ஒரு தீராத வெறி. அப்புறம் மெட்ராஸ்க்கு பஸ்ல போகும் போதெல்லாம் திருச்சிலயும், மெட்ராஸுலயும், ஏர்போர்ட்ட பார்க்க தவற மாட்டேன். எனக்கு கல்யாணம் முடிஞ்சு மெட்ராஸ்ல (மாமனார் ஊருங்க) வைஃப் கூட ஊர் சுத்துரப்பக் கூட பிளேன் சத்தம் கேட்டா என்னையும் அறியாம மேல பார்ப்பேன். அந்த இயந்திரப் பறவை மேல அப்படி ஒரு பைத்தியம். என்னாலக் கண்ட்ரோல் பண்ணவே முடியாது. நமக்குதான் வயசாகுதே தவிர ஆசைக்கு இல்லியே. என்னைக்கு அதுல ஏறிப் பறக்கப் போறோம்னு எதிர்பார்த்துக் கிட்டேயிருந்தேன். அந்த நாளும் வந்தது . . . அட ஆமாங்க . . . எனக்கு துபாயில வேலை கிடைச்சிருச்சு. அப்படியே வானத்துல தனியாப் பறக்குற மாதிரியும் தட்டாமாலை சுத்துர மாதிரியும் இருந்துச்சு. ஒரு பக்கம் புதுப் பொண்டாட்டிய விட்டுட்டுப் போற கவலைனா இன்னொரு பக்கம் நீண்ட நாள் கனவு நனவாகப் போற சந்தோஷம். ஒரு குட்டி “ஊரே” வந்து வழியனுப்ப பிளேனுக்குள்ள ஏறுனேன்.
அடுத்து உக்காந்து இருந்தவன் எனக்கு பக்கத்து ஊருக்காரனாம், ஆறு வருஷமா துபாயில இருக்குறானாம். எப்படி பெல்ட் போடனுமுனு எல்லாம் சொல்லிக் குடுத்தான். நானும் அவனை கவனிக்கிற மாதிரியே ஏர்ஹோஸ்டஸ சைட் அடிச்சுக்கிட்டு இருந்தேன். எனக்கு சாப்பாடு குடுக்கும் போது டம்ப்ளர் தவறி கீழே விழுந்துருச்சு, உடனே நான் பதறிப் போய் அதை எடுக்கக் குனுஞ்சேன். உடனே அவன் தடுத்துட்டு “வேற கிளாஸ் குடு” னு அந்த பொண்ண “மெரட்டுற” மாதிரி சொன்னான். அதுக்கப்புறம் எங்கிட்ட ரகசியமா “சும்மாவா? . . . காசு குடுக்குறாமுல?” னு கிசுகிசுத்தான். “நீ புதுசுங்குறதுனால அவளுங்கள வாயப் பொளந்துக்கிட்டு பாக்குற, அடிக்கடி பறந்தீனா உனக்கும் அவளுங்களை மிரட்ட பழகிடும், வேணும்னா பின்னாடி திரும்பிப் பாரு கூத்த” னான். பின் சீட்ல ஒருத்தன் தலை வைக்கிற எடத்துல எண்ணைப் பிசுக்கு ஒட்டாமயிருக்க ஒரு வெள்ளைத் துணி இருக்குமே, அது அழுக்காயிருக்கு இன்பெக்சன் ஆகும் உடனே மாத்துனு கத்திக்கிட்டியிருந்தான். அந்த பொண்ணு ‘பிளேன் கிளம்பப் போகுது, எடத்துல உக்காந்து பெல்ட்டப் போட்டுக்குங்க’ னு சொல்ல சொல்ல இன்னொருத்தன் காதுலயே வாங்காம பாத்ரூமுக்கு எந்துருச்சு போனான். சரக்கு குடிக்க குடுத்தப்ப ‘இன்னொரு கிளாஸ் குடு’ னு குடிமகன் ஒருத்தன் கிளம்பினான். ‘வீடியோ தெரியல . . ரேடியோ சவுண்டாயிருக்கு . . ஏஸி கூலிங் இல்லை’ னு ஆளாளுக்குப் படுத்தியெடுத்துட்டானுங்க. எனக்கு அந்த பொண்ணுங்களப் பாக்க பாவமாயிருந்துச்சு. பிளேனும் கிளம்புச்சு . . உடனே ஊர்க்காரனைத் தாண்டி ஜன்னல் வழியா எட்டி எட்டி வெளிய பார்த்தேன். “ரிசர்வ் பண்ணும் போதே ஜன்னல் சீட் வேணும்னு கேக்கலயா” னான். நமக்கு எங்க அதெல்லாம் தெரியும்னு நொந்துக்கிட்டேன்.
.... அடுத்த பதிவில் நிறைவுறும் . . .
Labels:
கதை
|
21
comments
Tuesday, July 6, 2010
நினைவுச் சின்னம்
நினைவுச் சின்னம் இது ஓர் நினைவுச் சின்னம்
காக்கைக்கும் கூகைக்குமாய் பாழடைந்த ஓர் இருப்பிடம்
பழுது பார்க்க முடியாது தொட்டாலே நொறுங்கிடும்
உரு மொத்தம் கலைந்திடும் மண்ணாகிப் போய் விடும்
சக்கரவாகம் இங்கிருந்தால் சாக்கடைதான் உணவாகும்
மாந்தர் கூடிட அஞ்சுவர் பெரும் வேகமெடுத்து ஓடுவர்
வேரொருவர் உட்புக வழியுமில்லை இதனிடம்
என்னவள் விட்டுப் போன வாசம் மட்டும் தங்கிடும்
என்றேனும் இடிந்திடும் அன்றேனும் வந்திடுவாய்
உன் முகங்காண விழிகள் மட்டும் மூடாமல் நிலைத்திடும்
நினைவுச் சின்னம் இது உன் நினைவுச் சின்னம்
காக்கைக்கும் கூகைக்குமாய் பாழடைந்த ஓர் இருப்பிடம்
பழுது பார்க்க முடியாது தொட்டாலே நொறுங்கிடும்
உரு மொத்தம் கலைந்திடும் மண்ணாகிப் போய் விடும்
சக்கரவாகம் இங்கிருந்தால் சாக்கடைதான் உணவாகும்
மாந்தர் கூடிட அஞ்சுவர் பெரும் வேகமெடுத்து ஓடுவர்
வேரொருவர் உட்புக வழியுமில்லை இதனிடம்
என்னவள் விட்டுப் போன வாசம் மட்டும் தங்கிடும்
என்றேனும் இடிந்திடும் அன்றேனும் வந்திடுவாய்
உன் முகங்காண விழிகள் மட்டும் மூடாமல் நிலைத்திடும்
நினைவுச் சின்னம் இது உன் நினைவுச் சின்னம்
Labels:
கவிதை
|
6
comments
Subscribe to:
Posts (Atom)