என்னைப் பற்றி

My photo
பிறந்தது திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) வாழ்வது, ஜெத்தா, Saudi Arabia

Search This Blog

Powered by Blogger.

கழுகு

கழுகு
உயரே பறக்க வேண்டுமா? கழுகை கிளிக் செய்யவும்

Followers

விருந்தினர்

Monday, August 2, 2010

கண்ணீர் தேசம்

(குறிப்பு: அழகப்பா பல்கலையில் பயின்ற பொழுது, 1999 வருட ALUTES நிகழ்ச்சியின் சிறுகதைப் போட்டியில், இயக்குனர் "முள்ளும் மலரும்" மகேந்திரன் அவர்களால் தேர்வு செய்யப் பட்டு, அவரது கரங்களால் முதல் பரிசை பெற்ற எனது (முதல்) படைப்பு இது. போட்டி களத்தில் கொடுக்கப் பட்ட “மீன் கூடையுடன் செல்லும் பெண்களின்” ஓவியத்தை மையமாக வைத்து அரை மணி நேரத்தில் எழுதப் பட்டது.)

"ஏலா...மரியதாசு" என்றவாறு ஏஜெண்ட் சந்தானம் வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான். மரியதாசுக்கு வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். துடுப்பு வளித்து இறுகிய கைகள் ஆனால் வயிறு மட்டும் இருக்கிறேனா இல்லையா என பட்டிமன்றம் நடத்தியது.

"அய்யா!...ஏசெண்டய்யா...வாங்கய்யா..." வயதின் காரணமாக தடுமாறி எழுந்தார் மரியதாசு. "எங்கலெ வட்டிக் காசு...? அசலெத்தான் குடுக்க முடியல. வட்டியவாது ஒழுங்கா குடுக்கலாமுலெ?" தீக்குச்சியால் பற்களின் இடுக்கை சுத்தம் செய்தபடி சந்தானம் கேட்டான். பான்பராக்கோ, வெற்றிலையோ அவனது வெண்ணிற பற்களை செந்நிறமாக்கியிருந்தது.

"அய்யா...! கொஞ்சம் பொறுத்துக்கங்க... சின்னவம் இப்பதாம் பண்ணன்டாங் கிளாசுக்கு வந்துருக்காம். பிரசிடெண்டு அய்யாகிட்டம் சொல்லியிருக்கேம்... இந்த வருசம் படிப்பு முடுஞ்சதும் வேலெ வாங்கி தரதா சொல்லியிருக்காரு" சமாதனப்படுத்தினார்.

"அட போய்யா...! இவம் எப்ப சம்பாருச்சு, எங்கடனெ அடெய்க்கிறது? இதெல்லாம் கதெய்க்காவுமா...? இவனும் மூத்தவம் மாதிரி ஆயிட்டானா...என்ன பண்ணுவெ..?"

"அய்யா...." அலறினார் மரியதாசு "வேணாம்யா...ஒம்வாயாலெ அப்புடி சொல்லாதேயும்" கண்களில் நீர் கோர்த்தது.

"ஹ்ம்ம்ம்... மவராசன்...போயி சேந்து, இத்தோட வருசம் ரெண்டாச்சு...அவம் மட்டும் இருந்துருந்தா, குடும்பம் இன்னெலமெய்க்கி வந்துருக்குமாயா..." அரற்றியபடியே விசும்பத் ஆரம்பித்தார்.

"அட கடலுக்குப் போனவம், மீனோட வருவாம்னு பாத்தா... பொணமாயில்லா வந்தாம். வாடகெய்க்கு கொண்டு போன எம் படகெயுமில்லா படுபாவி சிங்களெய்ங்க கொண்டு போயிட்டானுவ... இப்பம் வாடகெ வளந்து, அசலும் வட்டியுமா பதினெஞ்சாயிரம் நிக்கு" சாமாதனப் படுத்தினான்.

"யாருய்யா நெனெச்சா? தொழிலுக்குப் போன எம்மவனெ இப்புடி சிங்களுனுங்க ஈவு எரெக்கமுல்லாமெ சுட்டுப் போட்டுட்டானுவலே..." பழுப்பு ஏறிய வேட்டியால் மூக்கை சிந்திக் கொண்டார். "அதாம்யா, ஒரு முடிவுக்கு வந்துட்டேன். சின்னவனெ இந்த பாழாப்போனக் கடலுக்கு அனுப்ப வேணாமுன்னு" தீர்க்கமாக சொன்னார்.

"எய்யா.. மரியதாசு... நல்லா யோசிச்சு பாரு... கடலுதாம் நமக்கு தெய்வம்... அதுலெ போறவனெல்லாமா சாவுறானுக? உம்மவன் சின்னவம் படுச்சி வேலெய்க்கு போயி எம்புட்டு சம்பாருச்சுறப் போறாம்..? நீயொண்ணும் ஒண்டிக் கட்டயில்லெ... வயசுக்கு வந்த பொட்ட புள்ளம், அப்புறம் ஒம் பொண்டாட்டி, இத்தென பேரும் அவம் ஒருத்தனெ நம்பி... அட... எங்கடனெ வுட்டுத் தள்ளும்யா... ஒம்மவ மேரி கலியாணத்துக்கு எதுவும் சேக்க வேணாமா..?"

" ........................"

வெளியே சென்றிருந்த மேரியும், அம்மாவும் உள்ளே வந்து ஏஜெண்டைப் பார்த்து திடுக்கிட்டனர். தலையிலிருந்த இறக்கிய மீன் கூடையின் மணம் வீட்டை இலவசமாய் நிறைத்தது. வெயிலின் கொடுமை கண்களை இருட்ட, அம்மா மண்பானை நீரை ஒரு செம்பு எடுத்து மடக்... மடக்... எனக் குடித்தாள். தண்ணீர் வழிந்து அவள் தொண்டையை கொஞ்சம் குளிர வைத்தது.

ஏஜெண்ட்டிடம் திரும்பி "வாங்கய்யா.... இப்பதாம் வந்தீயளா..?" புடைவை தலைப்பால் ஈரத்தை ஒத்திக் கொண்டாள்.

"ஏம்மா! ஒம்புருசன் ஒரு வெவரங்கெட்ட ஆளாயிருக்காம்... சின்னவனெ வேற வேலெய்க்கி அனுப்ப போறாராமுலெ.. இவெம் படிப்புக்கு எம்புட்டு சம்பாருச்சுறப் போறாம்? நீயாவது எடுத்து சொல்லி எம் படகுக்கு அனுப்பி விடு... தொழில பழகட்டும்.... நாம் பாத்து போட்டு தரேன்"

"வேணாமுய்யா... புள்ளெய்ங்க ஒவ்வொரு மொறெ கடலுக்கு போகும்போதும் உசுரு எம்ம நெஞ்சுல இல்லம்யா... எங்கய்யுலெ இருக்குயா... சின்னவனெயும் அந்த படுபாவிகளுக்கு தூக்கிக் குடுக்கம் வேணாமுயா"

அம்மா சொல்வதைக் கேட்ட மேரியும் "ஆமாயா, கஞ்சியோ ... கூழோ ... நானும் அம்மயும் மீனெ வித்து ஊத்துறம். அவம் படுச்சு சம்பாருச்சு எங்களெ காப்பாத்தட்டும்" உறுதியாக சொன்னாள்.

" சரி ... சின்னவம் வந்ததும் சொல்லி பாருங்க... இப்பம் அவனுக்கு அரப்பருட்ச லீவுதான...? ரெண்டு நாளு வந்து பாக்கட்டும் . . அப்புறம் ஒம்ம இஷ்டம்" பதிலைக் கூட எதிர்பாராமல் வேட்டியின் தலைப்பை கால்களால் லாவகமாக கைக்கு கொண்டு வந்தபடி விறுவிறுவென நடந்த ஏஜெண்ட்டை அம்மாவும் மகளும் நடுங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். மரியதாசு தரையில் அமர்ந்து கிழிந்த வலையை புலம்பியபடியே மீண்டும் தைக்கத் தொடங்கினார்.

ஆளரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தார், எதிரில் சின்னவனும் பக்கத்து வீட்டு சுந்தரும் நின்றிருந்தனர். இருவரும் பள்ளித் தோழர்கள், சிறுவயது முதலே ஒன்றாய் வளர்ந்ததால் அப்படியொரு நெருங்கிய நட்பு.

"எப்போவ் .... ஏசெண்டய்யா உங்கிட்டம் என்னவோ சொல்லியிருக்காராமுலெ? இப்பதாம் வழியில பாத்தேன் .... என்ன சொன்னாரு...?" கண்களில் ஆர்வம் மின்னியது.

"ஏலா ... நீயி ... நீ ... கடலுக்குப் போரீயாலெ?" அப்பா தடுமாறி முடிக்கு முன்னே " இல்லம்பா ... நான் படிக்கேன்" ஆர்வம் கலவரமாய் மாறியது.

"அட ... அதுக்கில்லல்லா ... இப்பம் ஒனக்கு லீவு தான? ஒரு ரெண்டு நாளய்க்கு போயி பாரும்லா ... புடிக்காட்டி வேணாம்"

அப்பாவைப் பார்க்கவும் பரிதாபமாக இருந்தது. "ஏலேய், இப்பம் லீவுதனல்லா ... நானும் வரேன் ... வாலா ... ரெண்டு பேருமா போவம்" ஆதரவாய் கைகளைப் பற்றி சுந்தர் சம்மதிக்க வைத்தான்.

அம்மாவும், மேரியும் பெரும்பாலும் கடற்கரையில் மாதா குருசடியிலேயே அமர்ந்து இரண்டு நாளையும் கழித்தனர். கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் மல்க, மேரி மாதா முன் இருவரும் மணிக்கணக்காக வேண்டிக் கொண்டனர். மூன்றாம் நாள் விடியலிலேயே எழுந்து தலையில் மீன் கூடையை சுமந்தபடி சின்னவனை எதிர்பார்த்து கடற்கரைக்கு வேகவேகமாக நடந்தனர்.

எதிரே டீக்கடையிலிருந்து சுந்தரின் அப்பா பதட்டத்துடன் ஓடிவந்தார். அவரின் பரபரப்பைப் பார்த்ததும் இருவருக்கும் வயிற்றில் அமிலம் சுரந்தது.

"மோசம் போயிட்டளா .... மோசம் போயிட்டம் ... பேப்பர்ல இப்பதாம் பாத்தேன் ... நேத்தும் ரெண்டு படகெ புடுச்சு ஆளுவள சுட்டுப் புட்டானுவளாம்... எந்த படகுனு தெரியலயே மகமாயி" தலைதெறிக்க ஓடினார்.

"அய்யய்யோ .... அய்யய்யோ ... இந்த பாவி மனுசம்கிட்ட தல தலயா அடுச்சுக் கிட்டம் ... கேக்காமெ பச்ச புள்ளயெ அனுப்புச்சானே .... எம்புள்ளய்க்கி என்னாச்சோ...? ஏட்டி ... சீக்கிரம் வாடி ..." மகளை கூட எதிர்பாராமல் கடற்கரைக்கு ஓடினாள்.

தூரத்தில் ஒரு படகு கரை வருவது தெரிந்ததும் இருவரின் கால்களும் இயந்திரத்தனமானது. படகில் இருந்தவர்களிடம் "எய்யா... எம்புள்ளயளெ பாத்தீயளா? ... என்னென்னமோ சொல்றவுகளே??" மாரில் அடித்துக் கொண்டு கதறிய அம்மாவை, கண்ணீரும் கம்பலையுமாய் மேரி தேற்றிக் கொண்டு இருந்தாள்.

"என்னவோம்மா ... நம்ம பொழப்பு நாயி பொழப்பா போச்சு ... எப்பவும் சிங்களுனுங்கதாம் சுடுவானுவம் ... இப்பம் நம்ம கடல் போலீசே ஆள் தெரியாமெ சுட்டுப் புட்டானுவம் ... எந்த படகுனு சரியா தெரியலெ ... ரெண்டு ஆளுகளுக்கு உயிர் சேதமாம்" படகிலிருந்த பெரியசாமி சொன்னார். அவருக்கு இன்னும் நெஞ்சு படபடப்பு அடங்கவில்லை.

"அட .... நாசமா போறவனுவளே .... ஒங்களுக்கு மீன் புடிக்கத்தானம்யா கடலுக்குப் போறோம் ... நீங்களே சுட்டா எப்படிம்யா??? எம்மா ... வேளாங்கண்ணி தாயே!!! எம்புள்ளெய்க்கி எதுவும் ஆகிரக் கூடாது ... பத்தரமா கரை வரனும் .... அவம் ... வருவான் ... கண்டிப்பா வரு...." துக்கம் தொண்டையை அடைக்க புலம்பினாள். மேரியும், விசும்பியபடியே சின்னவனின் படகு வருகிறதா என கடலை வெறித்து பார்த்தபடி இருந்தாள்.

கடல் அலைகள் மட்டும் அவர்களின் கால்களை ஆதரவாய் வருடி சென்று கொண்டு இருந்தது.

9 comments:

ஜீவன்பென்னி said...

அண்ணே நெசமாவே நீங்க அண்ணந்தான். அந்த வாழ்க்கையோட கஷ்டத்த நல்லாவே சொல்லியிருக்கீங்க. அண்ணனுக்கு ஒரு சல்யூட்.

பனித்துளி சங்கர் said...

பார்வைகளின் காட்சிக்கு தகுந்த எழுத்து நடை மாறாமல் எழுதுவது ஒரு சிறப்புதான் . . மிகவும் அருமை நண்பரே . வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி

Chitra said...

"அட .... நாசமா போறவனுவளே .... ஒங்களுக்கு மீன் புடிக்கத்தானம்யா கடலுக்குப் போறோம் ... நீங்களே சுட்டா எப்படிம்யா??? எம்மா ... வேளாங்கண்ணி தாயே!!! எம்புள்ளெய்க்கி எதுவும் ஆகிரக் கூடாது ... பத்தரமா கரை வரனும் .... அவம் ... வருவான் ... கண்டிப்பா வரு...." துக்கம் தொண்டையை அடைக்க புலம்பினாள். மேரியும், விசும்பியபடியே சின்னவனின் படகு வருகிறதா என கடலை வெறித்து பார்த்தபடி இருந்தாள்.

கடல் அலைகள் மட்டும் அவர்களின் கால்களை ஆதரவாய் வருடி சென்று கொண்டு இருந்தது.

...... கண்ணீர் தேசத்தின் பிரார்த்தனைகளும் கவலைகளும் கண்ணீரும், எங்கள் மனதை தொட்டு சென்று விட்டன..... அருமையான பதிவு..... பாராட்டுக்கள்!

Anonymous said...

அருமையான கதை வில்சன்.
வெகு நாட்களுக்கு பிறகு நம் ராமநாதபுரத்து மொழிநடையில்
சிறப்பான ஒரு ஆக்கம் படித்த மகிழ்ச்சி.
வாழத்துக்கள் நண்பா!

Unknown said...

தெளிவான பதிவு, வாழ்த்துக்கள்.

சிறுகுடி ராம் said...

மாப்ள, ரொம்ப சூப்பர்டா...
கதையோட ஆரம்பத்துல இருந்தே ஒவ்வொரு கதாப்பாத்திரமும் என் கண்ணுக்குள்ளேயே இருந்தது போன்ற உணர்வு. அதேபோல் ஒவ்வொரு டயலாக்கும் இன்னமும் என் மனசுக்குள்ளே அதுவா பேசிக்கிட்டு இருக்குடா... மிகவும் அருமையான பேச்சுவழக்கு. வாழ்த்துக்கள்டா..!

dheva said...

சமூக பிரச்சினையை சொன்னதோட இல்லாம எழுத்துல வட்டார வழக்கு....சும்மா பூந்து விளையாடுதுப்பு........


மாப்பு............டாப்பு......!

School of Energy Sciences, MKU said...

வாழ்த்திய அன்பு உள்ளங்கள் அனைத்துக்கும் மிக்க நன்றி! இந்த கதை எழுதிய நேரம் நமது கடலோர காவல்படை தவறுதலாக நமது மீனவர்களையே சுட்டு தள்ளிய நிகழ்வு பரபரப்பாக பேசப் பட்டது. அந்த பாதிப்பில் உருவானது தான் இந்த கதையின் கரு.

செல்வா said...

அப்படியே சிலிர்க்க வச்சிட்டீங்க ..!!!
எனக்கு என்ன சொல்றதுனே தெரியல ..!
அவங்கள அப்படியே என் கண் முன்னாடி வந்து நிக்க வச்சமாதிரி இருக்கு ..!!