என்னைப் பற்றி

My photo
பிறந்தது திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) வாழ்வது, ஜெத்தா, Saudi Arabia

Search This Blog

Powered by Blogger.

கழுகு

கழுகு
உயரே பறக்க வேண்டுமா? கழுகை கிளிக் செய்யவும்

Followers

விருந்தினர்

Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts
Friday, July 9, 2010

இயந்திரப் பறவை - பாகம் 3



இதுவரை

          எனக்கு கண்ணயிருட்டிகிட்டு வந்துச்சு, அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுனே தெரியல. ரொம்ப‌ நேரங்கழிச்சுத்தான் முழிச்சேன். சுத்திப் பார்த்தா ஒரே புகைமண்டலமா இருக்கு. என்னை கூப்புட வந்தவுங்க எல்லாம் அங்க எனக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோனு பதறிகிட்டு இருப்பாங்கனு நினைக்கிறப்போ, அழுகை அழுகயா வருது. ரொம்ப கஷ்டப்பட்டு அப்படியே ஊர்ந்து ஊர்ந்து மேலே வந்தேன்.

             ரொம்ப நாள் கழிச்சு என்னைப் பார்க்கப் போற சந்தோஷத்துல வந்த எல்லாரும் இப்போ கண்ணீரும் கம்பலையுமா நிக்கிறதை கற்பனை செஞ்சு கூடப் பாக்க முடியலை. எனக்கு மட்டுமா? இன்னும் எத்தனை பேருக்கு என்னென்ன கவலையோ? தங்கச்சிக் கல்யாணத்துக்கு நகை கொண்டு வர்ர அண்ணன், ஜப்திக்குப் போற வீட்ட மீட்க வர்ற பையன், பொறந்து ரெண்டு வருஷமானப் புள்ளைய மொதல்முறையாப் பார்க்கப் போற அப்பானு எல்லாருடைய வாழ்க்கையும் ஒரு நிமிஷத்துல மாறிப் போயிருச்சு.

           அப்படியே நகர்ந்து இன்னும் கொஞ்சம் முன்னேறினேன். தூரத்துல போலீஸ்காரங்க நிறையப் பேரு ஆளுங்களை தேடியெடுத்துக் கிட்டு இருக்காங்க, சக்தியெல்லாம் கூட்டி கத்துறேன், ஆனா யாருக்கும் கேக்கலை. அந்த கூட்டத்துல‌ அப்பாவும் அண்ணனும் என்னைப் பதட்டத்தோட அங்கயும் இங்கயும் தேடி ஓடுறது மங்கலா தெரியுது. உடம்புல மிச்சமுள்ள சக்தியெல்லாம் கூட்டி முன்னேறினேன். இப்போ எனக்கு வலி படிப்படியா கொறையற மாதிரியிருக்கு, எந்திரிக்க முடியுது, எந்திருச்சு வேக வேகமா அவங்கப் பக்கத்துல ஓடுறேன்.

       "அப்ப்ப்பாபாஆஆஆ" னு ஏர்போர்ட்டே குலுங்க கத்துறேன். ஸ்டெரச்சர்ல போறவங்கள்ள என்னைத் தேடிக்கிட்டுயிருந்தவரு, சட்டுனு நிமிர்ந்து பார்த்த்துட்டு மறுபடியும் குனிஞ்சு தேட ஆரம்புச்சுட்டார். எனக்கு கண்ணீரும் அழுகையும் பொங்கிகிட்டு வருது, உடம்பெல்லாம் அழுக்காவும், கரியாவும் இருக்குறதுனால அடையாளம் தெரியல போல.

            அண்ணனைப் பார்த்து ஓடுறேன், கொஞ்சம் தொலைவுலயிருந்த எங்க அம்மாகிட்ட போய்கிட்டு இருக்கான். அம்மா பக்கத்துல என் சம்சாரம் மயக்கமா கெடக்குறது தெரிய, அங்கிட்டு ஓடுறேன். பக்கத்துல போய், அம்மா முன்னாடி போய் அப்படியே முட்டிப் போட்டு உக்காந்து மூச்சு எளைக்க, எளைக்க, அவங்களைப் பார்த்து "அம்மா . . . உங்க புள்ளை வந்துட்டேம்மா" னேன். என்னை வெறிச்சு பார்த்துகிட்டேயிருக்குறாங்க எந்த சலனுமில்லை. அப்போதான் எனக்கு லேசா சந்தேகம் வந்துச்சு.

              மயக்கமா கெடக்குற சம்சாரத்தப் பார்த்தேன். ஆதரவா அவள் தலைய கோதி விடப் பார்த்தா... கை அவ மேல படவேயில்லை. அதுக்குள்ள அண்ணன் வந்து "மோசம் போயிட்டோம்மா, நம்ம எல்லாரையும் தவிக்க விட்டுட்டு தம்பி போய்ட்டாம்மா . . அவன் கருகி கெடக்குற லெட்சணத்தை வந்து பாருமா" னு கதறுறான். என்னால நம்பவே முடியலை, கிள்ளி பார்த்தா முடியலை, கத்துறேன், கதறுறேன், யார் காதுலயுமே விழலை.

          அப்போ, எங்களை தாண்டிப் போன போலீஸ்காரங்க "பைலட் மேலதான் தப்புப்பா. கண்ட்ரோல் ரூம்லயிருந்து சொல்றதை கேக்காம, பிளேனை திரும்ப மேலயேத்தி இப்படி பண்ணிட்டாரு. அதுனால பாவம், அவர் குடும்பத்துக்கு சேர வேண்டிய காசக் கூட நிப்பாட்டிருவாங்க" னு பேசிக்கிட்டாங்க‌.

             நான் பக்கத்துல போய் கத்துறேன் " அய்யா, தப்பெல்லாம் எம்மேலதான்யா, நான் செல்போன்ல பேசுனதுனாலதான் அவருக்கு கண்ட்ரோல் ரூம் வயர்லெஸ் சரியா கேக்கலை, அந்தாளு பொண்டாட்டி புள்ளைங்களை தவிக்க விட்டுறாதீங்க...."

           என்ன பிரயோசனம்? நாம்பாட்டுக்கு கத்திக்கிட்டேயிருக்க வேண்டியதுதான், எனக்கு உரித்தானவுங்களுக்கே நான் பேசுரது கேக்கலை, மத்தவுங்களுக்கு எப்படி கேக்கும்?. கடைசியா எங்குடும்பத்தை ஒரு தடவை பார்த்துட்டு அப்படியே மேலே பறக்குறேன். என் கண்ணீரைத் துடைக்க மேகங்கள் கூட இப்போ இல்லை.

தங்கள் ஆதரவிற்கு நன்றியுடன்
வில்சன்
Thursday, July 8, 2010

இயந்திரப் பறவை - பாகம் 2

                                       
                                                      கதைக்குள் செல்லும் முன் . . . .

                              என்னை கை பிடித்து இழுத்து வந்து, உங்களுக்கு அறிமுகப் படுத்தி, ஓரமாய் நின்று புன்னகை செய்யும் என் அன்பு நண்பனும், கல்லூரித் தோழனுமான, மாப்ஸ் தேவாவுக்கு நன்றி சொல்லி . . .    முதல் கதையிலேயே  என்னை பிரபல பதிவர் அந்தஸ்துக்கு உயர்த்திய உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வணங்கி நன்றியுடன் பயணிக்கிறேன்.

அன்புடன்

வில்சன்


முன் கதை


             ஒரு வழியா துபாய் வந்து வேலையில சேர்ந்தேன். ஒரு வருஷமும் ஓடிருச்சு, ஊருக்கு போக லீவு குடுத்தானுங்க. நமக்குத்தான்  பிளேன்ல போய் அனுவம் வந்துருச்சுல...உடனே ஏஜெண்ட்கிட்ட போய் ஜன்னல் ஓர சீட்டா ரிசர்வ் பண்ணச் சொல்லி டிக்கெட்ட வாங்கிக்கிட்டேன் (எல்லாம் சக பயணி குடுத்த ஐடியாதான்).

               உள்ளே ஏறி உக்காந்து, வீட்டுக்கு போனப் போட்டு “அப்பா பிளேன் ஏறிட்டேன், இன்னும் மூணு மணி நேரத்துல லேண்டாயிருவேன்” னு ஆத்தா நான் பாசாயிட்டேன் கணக்கா கத்தினேன். செல்போனை  எல்லாம் அணைக்க  சொல்லி மைக்ல சொல்லியும்  ரொம்ப பேரு  சட்ட  பண்ணவே இல்ல. உள்ள  இருந்த எல்லாருக்குமே பிளைட் அனுபவம் இருந்ததால அந்த பொண்ணுங்க பாடு ரொம்ப திண்டாட்டமாயிருந்துச்சு. ஏனோ இப்ப  அந்த பொண்ணுங்க மேல எனக்கு பரிதாபம் வரலை.

                ஒரு வழியா பிளேன் ஒரு வட்டமடுச்சு வானத்துல ஜிவ்வுனு ஏறுச்சு. வயிரெல்லாம் கூச, ஜன்னல் வழியா கட்டடங்கள் எல்லாம் சின்னதாகி ஒரு புள்ளியா மறைய ஆரம்பிக்கிறதைப் பார்த்துக்கிட்டு  லைட்டா கண்ணசந்தேன். நெனப்பு எல்லாம் ஒரு வருஷம் கழிச்சு பார்க்கப் போற சம்சாரத்த  சுத்தியே வந்துச்சு, இந்நேரம் அப்பா, அம்மா, மாமனார்  வீடுனு  ஒரு பட்டாளமே கிளம்பி  ஏர்போர்ட்டுக்கு வந்துகிட்டுயிருக்கும்.

           நல்லா தூக்கத்துல இருந்தவனை "எல்லாரும் பெல்ட்ட போட்டுக்கங்க ஊர் நெருங்கிருச்சு" னு மைக் அலறி  எழுப்பி விட்டுச்சு. வெளியே எட்டிப் பார்த்தேன், மேகங்களின் உள்ளாற  பிளேன்  போறதைப் பார்க்கும்போது, அது  தேங்காப்பூத்  துண்டுலத்  தலையத் துவட்டிக்கிற‌ மாதிரியிருந்துச்சு.

                      கட்டடங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா தெரிய ஆரம்பிக்க, மனம் தனியே பறக்க ஆரம்பிச்சுருச்சு. ஏர்போர்ட்டுக்கு பக்கத்துல பிளேன் நெருங்கும் போது மறுபடியும் வெளியே பார்த்தேன், பிளேன்ல உரசுர   அளவுக்கு நிறைய செல்போன் டவர்கள் இருந்துச்சு. விஞ்ஞானம் வளர  வளர உலகம்  ரொம்பத்தான்  சுருங்கிப்  போயிருச்சு.

                    ஒரு காலத்துல எங்க ஊர் போஸ்டாபிஸ்ல மட்டும்தான் போன் இருக்கும். மிலிட்ரிகாரங்க வீட்டுக்கும், மலேயாகாரங்க வீட்டுக்கு  மட்டும் எப்பவாச்சும் போன் வந்துருக்குனு கூப்புட்டு விடுவாங்க. இப்ப  என்னடானா பூ  விக்கிற ஆயாலருந்து எல்லார்  கையிலயும் செல்போன் புழங்குது.

                  இப்படி யோசிக்கும் போதே சட்டுனு ஒரு ஐடியா வந்துச்சு. அது வேறொண்ணுமில்ல... அதுதான் டவர் எல்லாம் பக்கத்துல தெரியுதே... அப்போ கண்டிப்பா செல்போனுக்கு சிக்னல் கிடைக்கும். எறங்குறதுக்கு முன்னாடியே போன் பண்ணி வீட்ல ஆச்சரியப் படுத்துலாமுனு ஒரு சூப்பர் பிளான் (எப்பூடி?)

               உடனே போன எடுத்து ஆன் பண்ணேன், சிக்னல் ஃபுல்லா இருந்துச்சு, அட! நமக்கு கூட மூளை வேலை செய்யுதேனு பெருமைப் பட்டுகிட்டேன். நம்பர டயல் பண்ணி காதுல வச்சேன், ரிங் போற மாதிரி தெரியல. அதுக்குள்ள பிளேன் ரன் வே கிட்ட வந்துருச்சு . . அடச் சே . . பறக்கும் போதே போன் பண்ணி அசத்தலாம்னா இப்படி சதி பண்ணுதேனு நொந்துகிட்டே ரீடயல் போட்டேன்.

                    அப்போ தீடீருனு பிளேன் குலுங்குச்சு, பயங்கர சத்தம் வேற, ஒன்னுமே புரியல. இறங்குன பிளேன் மறுபடியும் மேலே கிளம்புர மாதிரியிருந்துச்சு, பார்த்தா ரன் வேயை தா...ண்....டி....  காம்பவுண்ட் செவுத்துல மோதி நான் உக்காந்துருந்த சீட் கிட்ட கரெக்ட்டா  ரெண்டு  துண்டா ஒடஞ்சுச்சு. நான்  பயந்து போய் பெல்ட்ட கழட்டிட்டு  அப்படியே கீழ குதிச்சேன். ஒரு செகண்டுதான், பிளேன் பயங்கர சத்தத்துல வெடிச்சு சிதறிருச்சு.


- ‍‍‍‍நாளைக்கு கண்டிப்பாக நிறைவு பெறும்


அன்புடன்

வில்சன்
 
 
 
 
 

இயந்திரப் பறவை - பாகம் 1


எங்க ஊரு பெரிய சிட்டியெல்லாம் கெடயாது, சாதாரண டவுன் தான். அதுனால ஏரோப்பிளேனயெல்லாம் நாங்க பார்க்குறதுக்குனா, மதுரைக்குப் போனா தான் உண்டு. எப்பவாச்சும் காரைக்குடி யுனிவர்சிட்டி விழாவுக்கோ, இல்லாட்டி தேர்தல் கூட்டத்துக்கோ ஹெலிகாப்டர் எங்க ஊர் வழியா போகும். அந்த சத்தம் கேட்டா போதும், எல்லாருக்கும் குஷிதான், சாப்புடுற சோத்தக் கூட அப்படியே விட்டுட்டு பொட்டலுக்காவது இல்லாட்டி மொட்டமாடிக்காவது ஓடுவோம். ஸ்கூல்ல சமயத்துல கூட அப்படிதான். எங்களுக்கு முந்திக்கிட்டு டீச்சர் ஓடுவாங்க. இதுல வயசு வித்தியாசமெல்லாம் கெடயாது. எல்லாரும் ‘ஆ‍ஆ‍’- னு அன்னாந்து பார்த்து ஆளாளுக்கு ஒரு ஏரோப்பிளேன் கதய அள்ளி விடுவாங்க. நாங்கூட பசங்க கிட்ட ‘என்னப் பார்த்து ராஜீவ் காந்தி கையக் காட்டுனாரு’னு அளந்து விடுவேன். அதயும் கேக்க ஒரு கூட்டம் ஆர்வமா இருக்கும். அதுக்கும் ஒரு காரணம் இருக்கு, எங்க ஊருல ரெண்டு மூணு வீட்டுலதான் மொட்ட மாடி ரொம்ப உயரமா இருக்கும். அதுனால பசங்க எல்லாரும் எங்க‌ மாடியில இருந்துதான் எப்பவும் பிளேன் பார்ப்போம். ராத்திரியில‌ அப்பா அம்மா கூட மாடியில நெலாச்சோறு சாப்புட்டுக் கிட்டே ரொம்ப உசரத்துல நட்சத்திரம் மாதிரி மினுக்கிட்டே அமைதியா போற‌த கண்கொட்டாம ரசிப்பேன். அப்பாகிட்ட அடிக்கடி நான் கேக்குறதுலாம் ஒண்ணே ஒண்ணுதான் 'எப்பப்பா என்னை அதுல கூட்டிட்டு போவீங்க?'


என்னை சமாதானப்படுத்த ஒரு பொம்மை பிளேன் வாங்கி குடுத்தாரு. அது பறக்காது, ஆனா, அச்சு அசல் பிளேன் மாதிரியே சத்தம் குடுத்துக்கிட்டு சுத்தி சுத்தி வரும். ரொம்ப நாள் வரை அதை பத்திரமா வச்சுருந்தேன். இப்படி, என்னோட பிளேன் காதல் அடங்கவேயில்ல. பெரியாளானதும் ஒரு தடவையாவது அதுல பறக்கனுமுனு ஒரு தீராத வெறி. அப்புறம் மெட்ராஸ்க்கு பஸ்ல போகும் போதெல்லாம் திருச்சிலயும், மெட்ராஸுலயும், ஏர்போர்ட்ட பார்க்க தவற மாட்டேன். எனக்கு கல்யாணம் முடிஞ்சு மெட்ராஸ்ல‌ (மாமனார் ஊருங்க) வைஃப் கூட ஊர் சுத்துரப்பக் கூட பிளேன் சத்தம் கேட்டா என்னையும் அறியாம மேல பார்ப்பேன். அந்த இயந்திரப் பறவை மேல அப்படி ஒரு பைத்தியம். என்னாலக் கண்ட்ரோல் பண்ணவே முடியாது. நமக்குதான் வயசாகுதே தவிர ஆசைக்கு இல்லியே. என்னைக்கு அதுல ஏறிப் பறக்கப் போறோம்னு எதிர்பார்த்துக் கிட்டேயிருந்தேன். அந்த நாளும் வந்தது . . . அட ஆமாங்க . . . எனக்கு துபாயில வேலை கிடைச்சிருச்சு. அப்படியே வானத்துல தனியாப் பறக்குற மாதிரியும் தட்டாமாலை சுத்துர மாதிரியும் இருந்துச்சு. ஒரு பக்கம் புதுப் பொண்டாட்டிய விட்டுட்டுப் போற கவலைனா இன்னொரு பக்கம் நீண்ட நாள் கனவு நனவாகப் போற சந்தோஷம். ஒரு குட்டி “ஊரே” வந்து வழியனுப்ப பிளேனுக்குள்ள ஏறுனேன்.

அடுத்து உக்காந்து இருந்தவன் எனக்கு பக்கத்து ஊருக்காரனாம், ஆறு வருஷமா துபாயில இருக்குறானாம். எப்படி பெல்ட் போடனுமுனு எல்லாம் சொல்லிக் குடுத்தான். நானும் அவனை கவனிக்கிற மாதிரியே ஏர்ஹோஸ்டஸ சைட் அடிச்சுக்கிட்டு இருந்தேன். எனக்கு சாப்பாடு குடுக்கும் போது டம்ப்ளர் தவறி கீழே விழுந்துருச்சு, உடனே நான் பதறிப் போய் அதை எடுக்கக் குனுஞ்சேன். உடனே அவன் தடுத்துட்டு “வேற கிளாஸ் குடு” னு அந்த பொண்ண “மெரட்டுற” மாதிரி சொன்னான். அதுக்கப்புறம் எங்கிட்ட ரகசியமா “சும்மாவா? . . . காசு குடுக்குறாமுல?” னு கிசுகிசுத்தான். “நீ புதுசுங்குறதுனால அவளுங்கள வாயப் பொளந்துக்கிட்டு பாக்குற, அடிக்கடி பறந்தீனா உனக்கும் அவளுங்களை மிரட்ட பழகிடும், வேணும்னா பின்னாடி திரும்பிப் பாரு கூத்த” னான். பின் சீட்ல ஒருத்தன் தலை வைக்கிற எடத்துல எண்ணைப் பிசுக்கு ஒட்டாமயிருக்க ஒரு வெள்ளைத் துணி இருக்குமே, அது அழுக்காயிருக்கு இன்பெக்சன் ஆகும் உடனே மாத்துனு கத்திக்கிட்டியிருந்தான். அந்த பொண்ணு ‘பிளேன் கிளம்பப் போகுது, எடத்துல உக்காந்து பெல்ட்டப் போட்டுக்குங்க’ னு சொல்ல சொல்ல இன்னொருத்தன் காதுலயே வாங்காம பாத்ரூமுக்கு எந்துருச்சு போனான். சரக்கு குடிக்க குடுத்தப்ப ‘இன்னொரு கிளாஸ் குடு’ னு குடிமகன் ஒருத்தன் கிளம்பினான். ‘வீடியோ தெரியல . . ரேடியோ சவுண்டாயிருக்கு . . ஏஸி கூலிங் இல்லை’ னு ஆளாளுக்குப் படுத்தியெடுத்துட்டானுங்க. எனக்கு அந்த பொண்ணுங்களப் பாக்க பாவமாயிருந்துச்சு. பிளேனும் கிளம்புச்சு . . உடனே ஊர்க்காரனைத் தாண்டி ஜன்னல் வழியா எட்டி எட்டி வெளிய பார்த்தேன். “ரிசர்வ் பண்ணும் போதே ஜன்னல் சீட் வேணும்னு கேக்கலயா” னான். நமக்கு எங்க அதெல்லாம் தெரியும்னு நொந்துக்கிட்டேன்.

.... அடுத்த பதிவில் நிறைவுறும் . . .