என்னைப் பற்றி
- School of Energy Sciences, MKU
- பிறந்தது திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) வாழ்வது, ஜெத்தா, Saudi Arabia
Search This Blog
Blog Archive
Powered by Blogger.
Followers
விருந்தினர்
Friday, July 23, 2010
கடலடியில் ஒரு தமிழன் (பாகம்-3)
வணக்கம் சகா!
இது வரை
மதுரை சென்றதும், இரு நாட்கள் கழித்து இராமேஸ்வரம் (புதுமடம்) கிளம்ப தயார் செய்து கொண்டு இருந்தோம். என்னைப் போலவே மதுரைக்கார நண்பர் மாரிமுத்து என்பவரும் முனைவர் படிப்பிற்காக சேர்ந்து இருந்தார். அவரும் என்னைப் போலவே ஒரு “நீச்சல் வீரர்?????” தான். அவர் என்னைப் பார்த்து “இவன் பெரிய ஆளாய் இருப்பானோ?” என்றும், நான் அவரைப் பார்த்து “இவன் பெரிய நீச்சல்காரனாக இருப்பானோ?” என்றும் பயந்து கொண்டு இருந்தோம்.
அவரையும், அவர் சார்ந்த மனிதர்களையும் பற்றி தனியே ஒரு பதிவு விரைவில் எழுதலாம் என்று இருக்கிறேன்.
ஒரு வழியாக புதுமடம் கிராமம் அடைந்தோம். அங்கே, எங்களுக்கு கடலில் நீந்த தேவையான கண் கண்ணாடி (மாஸ்க்), காலுக்கு துடுப்பு, ஆள் உயர இரப்பர் உடையென சகல உபகரணங்களும் இருந்தது. இதையெல்லாம், டிஸ்கவரி சானலில் மட்டுமே இதுவரை கண்டிருந்த எங்களுக்கு, ஏதோ சாதிக்கப் போகிறோம் என்று பொறி கிளம்பியது. எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அருகிலுள்ள மண்டபம் என்ற ஊருக்கு சென்று அங்கே ஒரு படகை வாடகைக்கு அமர்த்தி முயல் தீவுக்குக் கூட்டிப் போனார்கள்.
அங்கே, முட்டியளவு நீரில் இறங்க சொல்லி, பவளப்பாறைகளையும் அதன் சகவாசிகளான வண்ண வண்ண மீன்களையும் ரசிக்க சொன்னார்கள். நானும் தொபீரெனக் குதித்து “டம் . . டம் . . டம்” என நீச்சல் அடிக்கத் துவங்கினேன். நான் அடித்த அடியில் மீன்களெல்லாம் மிரண்டு ஓடிவிட்டன, தண்ணீர் வேறு கலங்கி சாக்கடை போல மாறி விட்டது. பரிதாபமாக எழுந்து நின்று பார்த்தால், எனது இரு முட்டியிலும் ரத்தம் கசிந்ததை கவனித்தேன். பின்னே? தண்ணீரே முட்டியளவு தான் இருந்தது அதில் பவளப்பாறைகள் வேறு, கிழிக்காமல் என்ன செய்யும்?. முட்டி உடையாமல் சைக்கிள் கற்றவனும், இரத்தம் வராமல் பவளப்பாறையில் நீந்தியவனும் இல்லை என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். நண்பர் மாரிக்கும் அதே நிலைமைதான் “ஒய் பிளட்? சேம் பிளட்?” என்று வடிவேல் கணக்காய் கேட்டுக் கொண்டோம்.
ஆனால், யாருக்கும் எளிதாய் கிடைக்காத ஒரு பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது என்ற நம்பிக்கையும், ஆர்வமும் எங்களை தளர விடவில்லை. தினமும் அதிகாலையில் கடற்கரையோர டீ கடையில் ஈ மொய்க்கும் போண்டாக்களை (அதற்கு வெடிகுண்டு எனச் செல்ல பெயர் வேறு) வாங்கி கட்டிக் கொண்டு (அதுதான் காலை உணவே) ஆறு மணிக்கு படகில் ஏறுவோம். திரும்ப கரைக்கு வர மதியம் ஒரு மணி ஆகிவிடும்.
ஒரு நாள், கொஞ்சம் ஆழமான பகுதியில் நீச்சலடித்து கொண்டு இருந்தோம். அந்த இடத்தின் பெயர் “பிசாசு முனை” (இராமேஸ்வரம்) பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல?. அந்த இடத்தில் எப்பொழுதும் ராட்சத அலைகள் அதிகமாக இருக்கும். பவளப்பாறைகளும் அதிகம் இருக்கும், எனவே அங்கே சென்று எனது சீனியர் ஒருவர் புகைப்படம் எடுக்க, நானும், மாரியும் அவர் அருகே சென்று நீந்தியவாறு அவர் கடலுக்கடியில் புகைப்படம் எடுப்பதை கவனித்து கொண்டு இருந்தோம். உடனே அவர் ரொம்ப பிகு பண்ணிக் கொண்டு எங்களை தள்ளிப் போகச் சொன்னார்.
பக்கத்தில் நின்றால் அவருக்கு புகைப்படம் சரியாக வராதாம். நாங்களும் சற்று தள்ளி வந்தோம். திடீரென ஒரு பெரிய அலை வந்து அவரை புரட்டிப் போட்டது. காமிரா ஒரு பக்கம் பறக்க அவர் அணிந்திருந்த முகக்கவசக் கண்ணாடிக்குள் (மாஸ்க்) தண்ணீர் ஏற மூச்சு திணறி “காப்பாற்றுங்க ... காப்பாற்றுங்க” என்று கத்தியவாறு நீரில் மூழ்க துவங்கினார். என்னையும், மாரியையும் தவிர மற்ற அனைவரும் படகில் இருந்தனர். நண்பர் மாரிமுத்துவும் சற்று தொலைவில் இருந்தார். நான் மட்டும் கூப்பிடும் தொலைவில் இருந்தேன்.
படகில் இருந்த எனது ஆசிரியர் என்னைப் பார்த்து அவனை போய் தூக்கிக் கொண்டு வாயா என்றார். நானோ ஒரு கற்றுக் குட்டி, ஏற்கனவே என்னை குளத்தில் காப்பாற்ற வந்த நண்பனையும் உயிர் பயத்தில் கெட்டியாய் பிடித்து நீந்தவிடாமல் கொல்லப் பார்த்திருக்கிறேன். அதே போல இந்த ஆளும் என்னை நீந்த விடாமல் பிடித்துக் கொண்டால்??? இருவரின் கதியும் அதோ கதிதான்.
ஆனாலும் யோசிக்க நேரமில்லை, சட்டென்று அவரருகில் சென்று அவரது புஜத்தைப் பிடித்து ஆசுவாசப் படுத்தினேன். ஒரு சப்போர்ட் கிடைத்த நம்பிக்கையில் அவரும் நிதானமானார். அவர் பாரமும் என்னை அழுத்த ஒரு வழியாய் படகுக்கு இழுத்து வந்து சேர்த்தேன். ஆசிரியரிடம் அவருக்கு செம டோஸ் விழுந்தது. அதிலிருந்தும் பல டிப்ஸ் கிடைத்தது.
நாளடைவில் பவளப் பாறைகள் மத்தியில் ரத்தம் பார்க்காமல் நீந்தும் கலையையும், மீன்களை கலவரப் படுத்தாமல் அவற்றை கண்காணிக்கும் கலையையும் கற்றுக் கொண்டேன். பெரும்பாலும் நீரின் மீது மிதந்த படி அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிப்பேன். முங்கு நீச்சலில் “தம்” பிடித்து உள்ளே சென்று வரும் கலையும் போகப்போக அத்துபடியானது. அடுத்த கட்டம், “ஸ்கூபா டைவிங்” எனும் சிலிண்டர் அணிந்து கடலுக்கடியில் செல்லும் கலையை கற்க வேண்டும்.
அதற்கான பயிற்சி தமிழகத்தில் கிடையாது. எனக்கு தெரிந்தவரை அந்தமானில் கற்றுத் தரப்படுவதாக அறிந்தேன். ஆனால், அந்தமான் சென்று வர, டைவிங் கற்க ஏராளமாய் செலவாகுமே? என்ன செய்வது? இந்நிலையில் நண்பர் மாரிக்கும் எனக்கும் ஒரே மாதிரியான எண்ணங்களும், தாகங்களும் இருந்ததால் நாங்கள் பயங்கர நெருக்கமாகி விட்டோம், இருவருமே அந்தமான் செல்லும் வாய்ப்புக்காக காத்திருந்தோம்.
அடுத்த பதிவில் அந்தமான் . . .
நன்றியுடன்
வில்சன்
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
நாளடைவில் பவளப் பாறைகள் மத்தியில் ரத்தம் பார்க்காமல் நீந்தும் கலையையும், மீன்களை கலவரப் படுத்தாமல் அவற்றை கண்காணிக்கும் கலையையும் கற்றுக் கொண்டேன். பெரும்பாலும் நீரின் மீது மிதந்த படி அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிப்பேன். முங்கு நீச்சலில் “தம்” பிடித்து உள்ளே சென்று வரும் கலையும் போகப்போக அத்துபடியானது. அடுத்த கட்டம், “ஸ்கூபா டைவிங்” எனும் சிலிண்டர் அணிந்து கடலுக்கடியில் செல்லும் கலையை கற்க வேண்டும்.
...... Keywest - near Miami is known for Scuba Diving. You will love it. Best wishes to be there soon! :-)
அண்ணே அடுத்து அந்தமானுக்கா. குளத்துல முழ்கி காப்பாத்த வந்த எங்கப்பாவையும் சேர்த்து அமுக்கி என்னைய எங்கப்பா புடிச்சு ஒரே தள்ளாத்தள்ளி பின்னாடி முடியப்புடிச்சு தூங்கி வெளியப்போட்டாங்க. நீச்சல் பழகிடுச்சுண்ணா அத விட சிறந்த உடல்பயிற்சி இல்லண்ணே.
///எனது இரு முட்டியிலும் ரத்தம் கசிந்ததை கவனித்தேன்.////
ஹை.. ஜாலி ...!!
//அடுத்த பதிவில் அந்தமான் . .///
சீக்கிரமா எழுதுங்க .. நல்லா இருக்கு ...!!
//சித்ரா//
நானும் அந்த இடம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி
//
ஜீவன்பென்னி said...
அண்ணே அடுத்து அந்தமானுக்கா. குளத்துல முழ்கி காப்பாத்த வந்த எங்கப்பாவையும் சேர்த்து அமுக்கி என்னைய எங்கப்பா புடிச்சு ஒரே தள்ளாத்தள்ளி பின்னாடி முடியப்புடிச்சு தூங்கி வெளியப்போட்டாங்க. நீச்சல் பழகிடுச்சுண்ணா அத விட சிறந்த உடல்பயிற்சி இல்லண்ணே.
//
ஹாஹா . . . காப்பாத்த வந்தவங்களையே கொல்ல பாக்குறது நம்ம ரெண்டு பேரும் தான் என்று நினைக்கிறேன்
//
ப.செல்வக்குமார் said...
///எனது இரு முட்டியிலும் ரத்தம் கசிந்ததை கவனித்தேன்.////
ஹை.. ஜாலி ...!!
//
அடப்பாவி....தம்பி என்று நம்பி....நான் உன்னை ......?????
நீ எப்பவுமே இப்டிதான் மாப்ஸ்....முதன் முதல்ல தண்ணில போகும் போது முட்டிய உடைச்சிகிறதே உனக்கு பழக்கம போச்சு.....அவ்வ்வ்வ்வ்வ்
செம ஜாலியா இருக்குட படிக்க.. அந்தமானுக்காக வெயிட்டிங்!
இவர் என்ன ரத்தம் சிந்தி கொண்டு இருக்கார் அடுத்த பதிவில் பார்ப்போம்...
அந்தமானா பாப்போம் :)
Post a Comment