என்னைப் பற்றி
- School of Energy Sciences, MKU
- பிறந்தது திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) வாழ்வது, ஜெத்தா, Saudi Arabia
Search This Blog
Blog Archive
Powered by Blogger.
Followers
விருந்தினர்
Monday, July 26, 2010
கடலடியில் ஒரு தமிழன் (பாகம்-4)
வணக்கம் சகா!
இதுவரை
அந்தமான் கனவு நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே சென்றது. ஒரு வருடமும் ஓடியது, ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் சேர்ந்திருந்த “இளநிலை ஆராய்ச்சியாளர்” வேலைக்காக எனக்குக் கிடைக்கும் உதவித்தொகை (STIPEND) அடிக்கடி தாமதமாகி மூன்று அல்லது நான்கு மாதங்கள் சேர்ந்து ஒருமித்து கிடைக்கும். அப்படி சம்பளம் இல்லாத ஒரு மாதத்தில் ஒரு நாள் எனது ஆசிரியர் கூப்பிட்டு “அந்தமானில் ஒரு மாதகாலம் பவளப்பாறைகள் பற்றிய பயிற்சி வகுப்பு நடைபெறப் போகிறது, ஆர்வமுள்ளவர்கள் பதிவு செய்யுங்கள்” என்றார். பயணப்படி எதுவும் கிடைக்காது சொந்த செலவில் தான் செல்லமுடியும் என்றும் அறிந்தோம்.
அந்தமான் செல்லவே நிறைய செலவாகும், இதில் டைவிங் வேறு சந்தடி சாக்கில் கற்று திரும்ப வேண்டும், சம்பளமும் இல்லை, என்ன செய்வது என்றே தெரியவில்லை. நானும், நண்பரும் முதலில் தயங்கினாலும் பின்னர் ஒரு மனதாக பயிற்சிக்கு செல்வது என முடிவெடுத்தோம். இருவரும் வீடுகளில் தயங்கி தயங்கி பணம் கேட்டோம். கல்லூரியில் படிக்கும் போது வீட்டில் பணம் கேட்க தயக்கம் இருக்காது. ஆனால், ஒரு வேலைக்கு சென்ற பின்பு மீண்டும் பெற்றோரிடம் கேட்க ரொம்பவும் கூசித்தான் போனது. எங்கள் ஆர்வம் அறிந்து, வீட்டிலும் பச்சை கொடி காட்டினார்கள்.
எனக்கு அடுத்தபடியாக முத்துராமன் எனும் தம்பியும் (எனக்கு முதுகலையில் ஜூனியர்) இளநிலை ஆராய்ச்சியாளராக புதிதாக சேர்ந்திருந்தார். அவர் இதற்கு முன் அந்தமானில் பணியாற்றியவர். எனவே, நாங்கள் மூவரும் அந்தமான் செல்ல ஆயத்தமானோம். முத்துவிடம் டிக்கெட் ரிசர்வ் பண்ணுவது பற்றி கேட்டேன். அவர் “மூன்றாம் தர வகுப்பிற்கு (3rd class) ரிசர்வேசன் கிடையாது, நேரில் போய்தான் எடுக்க முடியும், தைரியமாக கிளம்புங்கள்” என்றார். போருக்கு செல்லும் வீரன் போல வீட்டில் அனைவரும் வழியனுப்ப சென்னை வந்திறங்கி துறைமுகம் சென்றோம்.
அங்கே, மூன்றாம் வகுப்பு பயணிகளை எவ்வளவு கேவலமாக நடத்துகிறார்கள் என்று நேரில் கண்டு இரத்தம் கொதித்தது. கைக்குழந்தைகளுடனும், உடைமைகளுடனும் அனைவரும் அகதிகள் போல ரிசர்வேசன் கதவு எப்பொழுது திறக்கும் என்று கொளுத்தும் வெயிலில், தார் சாலையில் காத்துக் கிடந்தனர். எங்களைப் பார்த்து முத்து “இதற்கே மலைத்தால் எப்படி? அடுத்து ரிசர்வேசன் கவுன்ட்டர் திறந்ததும் வேடிக்கையை பாருங்கள்” என்றார்.
கவுன்ட்டர் திறந்ததும், ரஜினி படத்திற்கு முதல் ஷோ டிக்கெட் எடுக்கும் ரசிகர்களைப் போல ஒருவரை ஒருவர் மிதித்துக் கொண்டும் அடித்துக் கொண்டும் கூட்டம் திமிறியது. எங்கள் இருவரையும் உடைமைகளைப் பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு தம்பி டிக்கெட் எடுக்கக் கூட்டத்துக்குள் புகுந்தார். தனியாக செல்லும் பெண்களும், வயோதிகரும் இதில் எப்படி டிக்கெட் எடுத்து பயணம் செய்வார்கள்? என்று பிரம்மித்துப் போனேன்.
முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு இந்த பிரச்சனை இருக்காது. பணம் எளியோரை எப்படியெல்லாம் பாகுபடுத்துகிறது என நொந்து கொண்டேன். வெற்றிகரமாக டிக்கெட் எடுத்த பின்பு, ஒரு ஆள் மட்டும் நுழையும் அளவில் இருந்த வாயில் வழியே அனைவரும் முண்டியடித்து உள்ளே சென்றோம். எங்கள் லக்கேஜ் எல்லாம் அதன் வழியே எப்படி நுழைத்தோம் என்பது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.
உள்ளே நுழைந்ததும், “அண்ணே, கவனம்! உடனே பின்னே ஓடுங்கள்” என்று தம்பி முத்து உரக்கக் கத்தினார். என்னுடன் வந்தவர்களும் பக்கவாட்டில் பார்த்தபடி, அலறியடித்து பின்னே ஓடினர். நானும் அவர்களுடன் ஓடி என்னை ஆசுவாசப்படுத்துவதற்குள் ஒரு கூட்ஸ் ரயில் எங்களைக் கடந்து சென்றது. எனக்கு சப்தநாடியும் ஒரு கணம் அடங்கி விட்டது. எல்லாம் மயிரிழையில் நடந்தேறியது. மக்களுக்கு எந்த பாதுகாப்பும் முன்னறிவிப்பும் இல்லாமல், எப்படி இந்த இரயில் பாதை வழியே உள்ளே அனுப்புகிறார்கள் எனத் தம்பியிடம் கேட்டேன். “அதெல்லாம் அப்படித்தான் இன்னும் நிறைய இருக்கு, சீக்கிரம் வாங்க அடுத்த கூத்தைப் பார்க்க வேண்டாமா” என்று எங்களை தரதரவென இழுக்காத குறையாய் அழைத்து சென்றார்.
இன்னும் ஒண்ணா??? இப்பவே கண்ணக் கட்டுதே????. கஸ்டம்ஸ் என்ற பெயரில் எல்லாரையும் கிச்சு கிச்சு மூட்டி ஒரு இடத்தில் நிற்க வைத்தனர். பிரம்மாண்டமாய் நிற்கும் “நன்கொளரி” கப்பலைப் பார்த்ததும் பட்ட கஷ்டங்களெல்லாம் நொடிப் பொழுதில் பறந்தன. உள்ளே ஏறுவதற்கு மூன்று வழிகள் இருந்தன, மூன்றின் அடியிலும் டிக்கெட் பரிசோதகர்கள் வந்து நின்று தயாரானார்கள். எங்களுக்கு உள்ளே செல்ல அழைப்பு வந்ததும் ஓடிப் போய் சக பயணிகளுடன் வரிசையில் நின்றோம்.
வரிசையை சரிபார்த்துக் கொண்டு வந்த ஒரு பாதுகாப்பு காவலர், எங்கள் டிக்கெட்டை வாங்கி பார்த்து “இந்த வழி முதல் மற்றும் இரண்டாம் வகுப்புக்குரியது, அங்கே செல்லுங்கள்” என்று அடுத்த பாதையை காட்டினார். உடனே நாங்களும், எங்களுடன் நின்றிருந்த சக பயணிகளும் லக்கேஜ்களுடன் அலறியடித்துக் கொண்டு அடுத்த வழிக்குப் போனோம். அங்கே நின்றிருந்தவர் இங்கில்லை அங்கே செல்லுங்கள் என்று அடுத்த பாதையை காட்டினார்.
“வடை போச்சே” என்று நொந்து கொண்டு அடுத்த பாதைக்குப் போனால் அங்கேயும் இதே போல் தான் நாயை விரட்டுவது போல விரட்டினர். இருந்ததே மூன்று வழி, அடுத்து எங்கே செல்வது? லக்கேஜ் என்றதும் சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். ஒரு ஆளுக்கு ஒரு மாதத்திற்கான உடை, அதுபோக எங்கள் டைவிங் உபகரணங்கள் வேறு கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். நாக்கு தள்ளியது என்பார்களே அதை அன்று தான் அனுபவித்தேன்.
உடனே அனுபவசாலி முத்துராமன் அந்த காவலருடன் இந்தியில் வாக்குவாதம் நடத்தினார், அவர்கூட வேறு ஒரு சிலரும் சேர்ந்து கொள்ள சிறிது பரபரப்பு நிலவியது. இதில் என்ன கொடுமை என்றால், உயர் வகுப்பு பயணிகள் செல்லும் பாதைகள் வெறிச்சோடி கிடந்தன. ஆனால் எங்களை அனுமதிக்கவில்லை. ஒருவழியாக ஒரு இளகிய மனம்? படைத்த காவலர் வந்து உள்ளே செல்ல அனுமதித்தார். அப்பொழுது முத்து “இது ஒரு வழக்கமான கூத்து, எப்படி இருந்தது?” என்று சிரித்தார். எனக்கு டைட்டானிக் படத்தில் ஜாக் கோஷ்டி கப்பலில் ஏறும் சம்பவம் நினைவுக்கு வந்தது. படியில் ஏறும் பொழுது, மேலே நின்று வேடிக்கை பார்க்கும் பயணிகளில் ரோஸ் இருக்கிறாளா என்று அனிச்சையாய் என் கண்கள் தேடின.
என்றும் அன்புடன்
வில்சன்
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
//படியில் ஏறும் பொழுது, மேலே நின்று வேடிக்கை பார்க்கும் பயணிகளில் ரோஸ் இருக்கிறாளா என்று அனிச்சையாய் என் கண்கள் தேடின.//
என்னது ரோசா,தேடுங்க தேடுங்க :)
செம அனுபவங்கள்
படியில் ஏறும் பொழுது, மேலே நின்று வேடிக்கை பார்க்கும் பயணிகளில் ரோஸ் இருக்கிறாளா என்று அனிச்சையாய் என் கண்கள் தேடின.
..... Start...... Titanic Theme Music!!!!!!
இதற்கு முன்னால் நான் கேள்விப் பட்டதே இல்லை வில்சன்,
கப்பலில் கூட இந்த மாதிரி கிளாஸ் இருக்குமென்று!
( titanic படத்தில் வருவது கூட நிஜம் என்று நினைத்தது இல்லை :) )
உங்கள் அனுபவங்கள் மிகவும் அருமை!
///படியில் ஏறும் பொழுது, மேலே நின்று வேடிக்கை பார்க்கும் பயணிகளில் ரோஸ் ///
அப்ப கூட உங்க புத்தி உங்களை விட்டு போகல பாருங்க ..!!
டாப் ஸ்பீடுல போகுதுண்ணே.
நல்ல ஸ்பீட்டா போகுது அடுத்து என்ன நடக்குது பார்ப்போம்
நல்லா எழுதி இருக்கீங்க... தொடருங்க... வாழ்த்துக்கள்
//@ஜில்தண்ணி - யோகேஷ்@,@Chitra@,@ஜீவன்பென்னி@,@சௌந்தர்@,@அப்பாவி தங்கமணி@//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
//
ப.செல்வக்குமார் said...
///படியில் ஏறும் பொழுது, மேலே நின்று வேடிக்கை பார்க்கும் பயணிகளில் ரோஸ் ///
அப்ப கூட உங்க புத்தி உங்களை விட்டு போகல பாருங்க ..!!
//
கம்பெனி சீக்ரெட்ட வெளிய சொல்லாதப்பா . . .
//
Balaji saravana said...
இதற்கு முன்னால் நான் கேள்விப் பட்டதே இல்லை வில்சன்,
கப்பலில் கூட இந்த மாதிரி கிளாஸ் இருக்குமென்று!
( titanic படத்தில் வருவது கூட நிஜம் என்று நினைத்தது இல்லை :) )
உங்கள் அனுபவங்கள் மிகவும் அருமை!
//
அதுக்கப்புறம் எனக்கு கப்பல்ல போற ஆசையே போய்விட்டது நண்பரே
நல்ல பகிர்வு... பல இடங்களில் காசுக்கு தான் வழி இருக்கு நண்பா...
வழமை போல நேர்த்தியான எழுத்து நடையில் சிறப்பாக பதிவு செய்து இருக்கிறிகள் வாழ்த்துக்கள் . ஆமா நண்பரே இந்த கப்பலில் எல்லாம் பயணம் செய்ய எவளவு காசு கேப்பாங்க
உங்கள் எழுத்து நடை மிக சரளமாக படிக்க மிக நன்றாக உள்ளது.
மனோ
Post a Comment